2010-08-07 16:10:15

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
“பாரக் ஒபாமா இது குறித்து தன் கவலையைத் தெரிவித்தார். மெர்கல் இதனால் அதிகக் கோபம் அடைந்துள்ளார். சர்கோசி இதைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். ஆனால், இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் எந்தத் தலைவரும் இதைப் பற்றிப் பேசுவது இல்லை.”
சென்ற வாரம் போல் மீண்டும் செய்தியோடு ஆரம்பிப்பதாக நினைக்க வேண்டாம். செய்தி போலத் தொனிக்கும் இந்த வரிகள் ஒரு கட்டுரையின் துவக்க வரிகள். அந்தக் கட்டுரையின் தலைப்பு: வரிவிலக்கு எனும் தஞ்சம் அளிக்கும் நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள செல்வங்களை மீண்டும் பெற வேண்டும். (Get Back Money Illegally Deposited in Tax Havens - by Dr R Vaidyanathan.)

2009ம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து இது. நமக்குப் புதிதான கருத்து அல்ல. தவறான வழிகளில், சட்டத்தின் கண்களைக் குருடாக்கிவிட்டு, தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்துள்ள நம் அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும், பெரும் பணக்காரர்களும் பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமத்தைப் பற்றி மீண்டும் ஒரு முறை இந்தப் புத்தகம் அலசுகிறது. புத்தகத்தின் தலைப்பு: இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வங்கள். எப்படி இதை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவது? (Stolen Indian Wealth Abroad – How to Bring it back? A compilation of articles by Dr R Vaidyanathan, Sri.S.Gurumurthy, Sri.M.R.Venkatesh, and Sri.Arun Shourie, May 2009)
இந்த வாரச் சிந்தனைகளும் சென்ற வார சிந்தனைகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. சென்ற ஞாயிறன்று முட்டாள் செல்வந்தனைப் பற்றி இயேசு கூறிய அந்த உவமையோடு லூக்கா நற்செய்தியின் 12ம் அதிகாரத்தில் 22ம் திருவசனத்துடன் அந்த வாசகம் முடிந்தது. இந்த வாரம் அதே 12ம் அதிகாரத்தில் 32ம் திருவசனத்தில் இயேசு தொடர்ந்து பேசுவதாய் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இடைப்பட்ட வசனங்களில் இயேசு கூறுவதெல்லாம் வானத்துப் பறவைகளிலிருந்து, வயல்வெளி மலர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வார்த்தைகளே. இன்றிருந்து நாளை நெருப்பில் எறியப்படும் காட்டுப் புல்லை அழகுடன் பராமரிக்கும் இறைவன் நம்மைக் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு. தொடர்ந்து அவர் கூறும் இன்றைய நற்செய்தியின் முதல் இரு வசனங்களை மட்டுமே நமது சிந்தனைக்கு இன்று எடுத்துக் கொள்கிறோம். அந்த இரு வசனங்களையும் கேட்போம்:

லூக்கா 12: 32-34

திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக் கூடும் என்று நான் சிந்தித்துக்கொண்டிருந்த போது, மேலே குறிப்பிட்ட இந்தக் கட்டுரை, இந்தப் புத்தகம் என் கண்களில் பட்டது. திருடன், பூச்சி இவைகள் மட்டுமல்லாமல், சட்டம், வரி இவைகளிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற இந்திய செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள பல முயற்சிகள் இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளன.
1947ம் ஆண்டிலிருந்து இந்தக் கொள்ளை ஆரம்பமாகிவிட்டதென இந்தப் புத்தகத்தின் ஒர் அத்தியாயம் சொல்கிறது. 1947லிலிருந்து சூரையாடப்பட்டப் பொதுச் சொத்துக்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் (Public Loot since 1947: Let us bring back our money) என்பது இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரை. இப்படி சூரையாடப்பட்டச் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? எந்த ஒரு கணக்கிலும் காட்டப்படாத இந்த செல்வங்களை மதிப்பிடுவது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் 2002 முதல் 2006 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும் இப்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் சேர்க்கப்பட்டுள்ள செல்வத்தின் மதிப்பு 6 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் என்று மற்றொரு அத்தியாயத்தில் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

இது நமது நாட்டில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு போட வேண்டாம். இன்றைய ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்த போது, பாரக் ஒபாமா, மெர்கல், சர்கோசி என்று முதல்தர நாடுகளின் அரசுத் தலைவர்களைப் பற்றி கூறினேன். அவர்கள் நாடுகளிலும் இதுபோல் செல்வத்தைப் பிற நாடுகளில் சேர்த்து வைத்திருக்கும் பல செல்வந்தர்கள் உள்ளனர்.
இப்படி தவறான வழிகளில் குவிக்கப்பட்ட செல்வங்கள், தவறான இடங்களில் சேர்ந்துவிட்டதால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் அழிவைச் சந்திக்க வேண்டி இருந்தது. இந்த அழிவைப் பொருளாதார உலகில் ஏற்பட்ட ஒரு சுனாமி என்று கூட விவரித்தனர். இந்தப் பெரும் பொருளாதாரச் சரிவிலிருந்து உலகம் இன்னும் மீண்டு வரவில்லை.
இந்தச் சீரழிவு உலகை உலுக்கி எடுத்தபோதுதான் அரசுத் தலைவர்கள் இந்தக் கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் எல்லாம் சிந்தித்தபோது, நமது தலைவர்கள் அதைப் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை என்பதுதான் அந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகளில் நாம் கேட்ட புலம்பல். நமது தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல.
ஏற்கனவே, 2005ம் ஆண்டு இந்த கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W Baker என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். Capitalism’s Achilles Heel: Dirty Money And How To Renew The Free Market System. தனியுடைமை, முதலாளித்துவம் இவைகளால் சேகரிக்கப்பட்ட அழுக்குச் செல்வங்களைப் பற்றி அலசியிருக்கிறார் இந்தப் புத்தகத்தில்.

Bakerன் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் இருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 Trillion Dollars. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஒரு Trillion Dollar அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு Trillion Dollar என்பது எவ்வளவு பெரியத் தொகை? விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்த ட்ரில்லியன் டாலர்கள் நூறு டாலர் நோட்டுக்களாய் எண்ணப்படுவதற்கு உங்களிடம் கொடுக்கப்பட்டால், இடைவெளி எதுவும் இன்றி வருடத்தின் 365 நாட்களும் நீங்கள் எண்ணினாலும், அந்தத் தொகையை எண்ணி முடிக்க உங்களுக்கு 390 ஆண்டுகள் ஆகும்.
இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்வதற்கு பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.
விளையாட்டுச் சிந்தனைகளை ஒதுக்கி விட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், நமது நாட்டில் உள்ள நூறு கோடியையும் தாண்டிய மக்களுக்கு இந்தப் பணம் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டால், ஏழை பணக்காரர் என்று ஒவ்வொருவருக்கும் குறைந்தது 40,000 ரூபாய் கிடைக்கும். ஒரு சில குடும்பங்களில் இது ஒரு ஆண்டுக்கான வருமானம். இந்தியாவில் உள்ள வசதி படைத்தவர்களை ஒதுக்கி விட்டு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த ஒரு ட்ரில்லியன் டாலர்கள், அதாவது ஓராண்டில் பதுக்கப்படும் கறுப்புப் பணத்தை மட்டும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தால், அந்தக் குடும்பங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு வாழமுடியும். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்று இந்த எல்லா நாடுகளிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ முடியும். அந்த அளவுக்குப் பணம் இது.

பணத்தின் மதிப்பை வெறும் எண்ணிக்கையாக, அதாவது ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இப்படி மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும் போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்கு பதில் இந்தப் பணம் வங்கிகளில் குவிந்திருந்தால் வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும். பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும் போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம் தன் பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும் போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர்கள் ஒவ்வோர் ஆண்டும் பற்பல அயல்நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.
அவரவர் சம்பாதிக்கிறார், சேர்த்துவைக்கிறார்... இதைப் பற்றி நாம் ஏன் கேள்விகள் எழுப்ப வேண்டும் என்று தோன்றலாம். இல்லை அன்பர்களே, இந்தப் பணம் எல்லாம் சரியான வழியில் வராத பணம். எனவே தான், இவை தங்கள் நாட்டை விட்டு பிற நாடுகளில் தஞ்சம் புகுகின்றன. எனவே தான், இவற்றைக் கறுப்புப் பணம் என்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர்களில் பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள் வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப் படுகின்றன என்று Raymond W Baker தன் புத்தகத்தில் கூறியுள்ளார்.

சாதாரணமாகவே நாம் சேர்த்துவைக்கும் செல்வங்களைப் பற்றி இயேசு பேசும்போது, நேரிய வழிகளில் நீங்கள் சேர்க்கும் பணத்தையும், அளவுக்கு மீறி சேர்த்தால், அவை செல்லரித்துப் போகலாம், அல்லது, திருடப்படலாம் என்று எச்சரிக்கிறார். அதற்குப் பதில், அழியாத செல்வங்களான பகிர்தல், தர்மம் இவைகளைச் சேர்த்து வையுங்கள் என்று சொல்கிறார்.

Raymond W Bakerன் கணக்குப்படி, 2001 ம் ஆண்டு 11.5 ட்ரில்லியன் டாலர்களாக இருந்த இந்தக் கறுப்புப் பணம் இப்போது ஒவ்வோர் ஆண்டும் ஒரு ட்ரில்லியன் என்று அதிகரித்து, 20 ட்ரில்லியனுக்கு மேல் உயர்ந்திருக்கும். அவைகளில் எதுவும் செலவாகியிருக்காதோ? சந்தேகம் தான். இப்படி பதுக்கி வைக்கப்படும் பணம் வழக்கமாய் வெளியில் வருவது மிக அபூர்வம். இந்த இருபது ட்ரில்லியன் டாலர்கள் உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது தர்மம் கேட்காமல் நல்ல உடல், உள்ள நலனோடு வாழ முடியும். எவ்வளவு அழகான கற்பனை அன்பர்களே! உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் பத்து ஆண்டுகள் இந்த உலகம் இருந்தால்... அது விண்ணுலகம் தானே. இதைத்தானே இயேசுவும் ‘விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த 20 ட்ரில்லியன் டாலர்கள் கறுப்புப் பணத்தை, அதுவும் ஏழை நாடுகளிலிருந்து, ஏழைகளிடமிருந்து திருடப்பட்டக் கறுப்புப் பணத்தைப் பற்றி இயேசுவிடம் சொன்னால், அவர் என்ன சொல்லக் கூடும்? ஒருவேளை, ஒன்றும் சொல்லாமல் சாட்டையைக் கையில் எடுப்பார். அன்று எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்ததுபோல், கறுப்புப் பணத்திற்குத் தஞ்சம் தரும் வங்கிகளில் நுழைந்து அவைகளைச் சுத்தம் செய்வார். அல்லது, மௌனமாய் அழுவார். அன்று எருசலேம் நகரைப் பார்த்துக் கண்ணீர் விட்டதைப் போல் இவர்களையும் நினைத்து அழுவார்.

இயேசு அவர்களைப் பார்த்து என்ன சொல்வார், செய்வார் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், நம்மைப் பார்த்து அவர் இன்று தெளிவாய் சொல்லியுள்ளவைகளை நாம் எவ்வளவு தூரம் கேட்கப் போகிறோம்? செயலாக்கப் போகிறோம்?

லூக்கா 12: 32-34, 48ஆ
சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” கணக்கு காட்டாமல் செல்வம் சேர்ப்பவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கு நம்மிடம் தகுந்த கணக்கைக் கடவுள் எதிர்பார்ப்பார்.







All the contents on this site are copyrighted ©.