2010-08-07 15:30:22

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மில்லெனேய வளர்ச்சித் திட்டத்திற்கு இந்தியத் திருச்சபையின் பதில்


ஆக.07,2010. இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மில்லெனேய வளர்ச்சித் திட்ட இலக்குகளை மையமாக வைத்து இவ்வாண்டு நீதி ஞாயிறைக் கடைபிடிக்கவிருப்பதாக இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுத் தலைவர் ஆயர் யுவான் அம்புரோஸ் அறிவித்தார்.

இந்திய திருச்சபை ஆகஸ்ட் 22ம் தேதி ஞாயிறன்று கடைபிடிக்கும் நீதி ஞாயிறுக்கென செய்தி வெளியிட்டுள்ள தூத்துக்குடி ஆயரான இவர், இந்த ஆண்டின் நீதி ஞாயிறு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மில்லெனேய வளர்ச்சித் திட்ட இலக்குகளில் எட்டை மையமாக வைத்து கடைபிடிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அயலார் மீது அன்பு, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற விவிலியக் கூறுகளையும் திருச்சபையின் சமூகப் போதனைகளையும் வலியுறுத்தும் இந்த எட்டு இலக்குகளில் இந்திய திருச்சபை முக்கிய கவனம் செலுத்தும் என்று ஆயரின் செய்தி கூறுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், ஆண்-பெண் சமத்துவமும், புற்றுநோயை ஒத்த சாதிய அமைப்பும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்றுரைக்கும் ஆயரின் செய்தி, ஐ.நா.வின் மில்லெனேய வளர்ச்சித் திட்ட இலக்குகள் இவற்றை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்றும் கூறுகிறது.

இந்த இலக்குகள் உலகில் 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை நியுயார்க்கில் இது குறித்து ஐ.நா. கூட்டம் இடம்பெறவிருப்பதையும் ஆயர் யுவான் அம்புரோஸ் சுட்டிக் காட்டியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.