2010-08-07 15:31:22

இந்தியச் சட்டக்கமிஷன் மதமாற்றம் குறித்துப் பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது


ஆக.07,2010. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மதமாற்றம் குறித்த வழிமுறைகள் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை இந்தியச் சட்டக்கமிஷன் கேட்டிருப்பது, இந்த விவகாரம் குறி்த்து தேசிய அளவில் கொள்கைகளை உருவாக்க உதவியாக இருக்கும் என்று சில கிறிஸ்தவத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தியச் சட்டக்கமிஷனின் இந்நடவடிக்கை, கிறிஸ்தவச் சமூகம் தங்களின் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும், தனிமனிதரின் சமய சுதந்திரத்தை மதிக்கும் தேசிய சட்டம் கொண்டுவரப்படுவதற்கு ஊக்குவிக்கவும் கிறிஸ்தவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பாக இருக்கின்றது என்று போபால் பேராயர் லியோ கொர்னேலியோ கூறியுள்ளார்.

இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுதல் அல்லது மீண்டும் இந்து மதத்திற்கு மாறுதல் குறித்தவைகளில் எந்தவித குறிப்பிட்ட வழிமுறைகளும் 1955ம் ஆண்டின் இந்து திருமணச்சட்ட எண்ணில் குறிப்பிடப்படவில்லை என்று கடந்த ஆண்டு கேரள உயர்நீதி மன்றம் கூறியது. இதையடுத்து இந்தியச் சட்டக்கமிஷன் தற்போது மதமாற்றம் குறித்த வழிமுறைகள் பற்றி பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டிருக்கின்றது.

கேரளாவில் ஓர் இந்துக் கணவனும் ஒரு கிறிஸ்தவ மனைவியும் தங்களது திருமணத்தை இரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து அந்த நீதிமன்றம் இவ்வாறு கூறியது.

வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்தியச் சட்டக்கமிஷன் இம்மாதம் 20ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.