2010-08-06 15:04:09

ஆகஸ்ட் 07. நாளும் ஒரு நல்லெண்ணம்


அன்னை பூமி அன்னை தேசம் என்றெல்லாம் போற்றப்படும் தாய்மண் இன்று தூசி படிந்த புராதனக் கட்டிடமாய் நிற்கின்றாள்.

புவி ஈர்ப்பு விசையா அவளைத் தாங்கி நிற்கின்றது? இல்லை, இல்லை. நல்லவரின் புண்ணியமும் சத்தியமும்.

மலை உச்சிகள், பனிநிறைச் சிகரங்கள், சரிவுகள், சமவெளிகள்,ஆழங்கள், அமைதிகள் என எத்தனை வண்ணங்கள் அவள் மேனியில்?

எங்கெங்கோ வளைந்து நெளிந்து, பரந்து விரிந்து எத்தனை உயிர்களைத் தாங்குகின்றாள்?

அவளின் ஆன்மா என்ன ஆழ்கடலின் ஆழத்தில் உள்ளதா, அல்லது ஆகாய வெளிக்கும் அப்பால் உள்ளதா?

அவளின் அன்பையும் அரவணைப்பையும் அனுபவித்த மனம் அவளுக்கென ஏதேனும் ஆற்றத் துடிக்கின்றது.

வாசலில் கோலமிட்டு அன்னை பூமியை அழகு பார்க்கும் மரபு,

விதை விதைக்கவும், வீடு கட்டவும் முதலில் பூமியைப் பூஜை செய்து அனுமதி பெறும் பழங்குடிச் சடங்கு,

தேசத்தைத் தாயாகக் கருதிப் போற்றும் “வந்தே மாதரம்” என்ற தேசியப் பாடலின் உணர்வு

என இவையெல்லாம் நமக்கு என்ன சொல்ல வருகின்றன?

தனக்குள் அக்னியையே உறைய வைத்து, தன் செந்நீரையே தண்ணீராய்த் தரும் அத்தாய், எத்தனை மரங்கள், செடிகள் மூலிகைகளைத் தன் மேல் படர விட்டு பாசம் காட்டுகிறாள்.

நம் குறைபாடுகளை இட்டு நிரப்புபவள் அவள்தானே!

தன் மலர்கள் மூலமும் கனிகள் மூலமும் வாழ்வின் அர்த்தம் கற்பித்தவள் அவள்தானே.

சுற்றுச்சூழலை அழித்துச்செல்லும் நம் நிலை கண்டும் பொறுமை காக்கும் இத்தாய் சக்தியற்றவள் அல்ல. ஆனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவள்.

ஏனெனில் அவளைத் தாங்கி நிற்பதே நல்லவர் நாலுபேரின் புண்ணியமும் சத்தியமுமே.

வள்ளுவரும் அழகாகச் சொல்வார்,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அஃதின்றேல்

மண்புக்கு மாய்வது மன்








All the contents on this site are copyrighted ©.