2010-08-06 16:18:42

அணு ஆயுதங்களை அழிக்க ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள்


ஆக.06,2010. இவ்வெள்ளியன்று ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற இந்த 65-வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் முதல் முறையாக கலந்து கொண்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், உலகில் அணுகுண்டுகள் அனைத்தும் ஒழிக்கப்படுவதே அவை மீண்டும் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு ஒரேவழி என்று கூறினார்.

பாகுபாடின்றி மக்களைக் கொன்று குவிக்கும் இத்தகைய ஆயுதங்களுக்கு இவ்வுலகில் இடமே இருக்கக் கூடாது என்றும் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

74 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்ட இவ்வெள்ளிதின நிகழ்வில் அமெரிக்க ஐக்கிய நாடு முதல் முறையாக கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்ட காலை 8.15 மணிக்கு ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது, ஆயிரம் புறாக்கள் பறக்கவிடப்பட்டன மற்றும் கோவில் மணிகள் ஒலித்தன.

இன்னும், இந்நிகழ்வில் பேசிய ஜப்பான் பிரதமர் Naoto Kan, உலகில் அணுகுண்டு தாக்குதலுக்குப் பலியான ஒரே நாடாக ஜப்பான் இருக்கின்றது என்றும், இதனாலேயே இந்நாடு உலக அளவில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்படுவதற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.