2010-08-04 16:32:53

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


ஆகஸ்ட் 04, 2010 ஏறத்தாழ ஒரு மாதமாக திருத்தந்தையர்களின் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று ஹெலிகாப்டரில் வத்திக்கான் நகர் வந்து மக்களைச் சந்தித்தார். இப்புதன் சந்திப்பில் இன்னுமொரு முக்கியத்துவமும் இருந்தது. அதாவது ஐரோப்பாவின் பீடச்சிறார்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருத்தந்தையைச் சந்திக்க உரோம் நகர் வந்திருந்தனர்.

கோடை காலத்திற்கே உரிய வெப்பம் உரோம் நகரைத் தாக்கிக் கொண்டிருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் புனித ராயப்பர் திறந்தவெளிச் சதுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீடச்சிறார்களுடன் திருப்பயணிகளும் உல்லாசப் பயணிகளும் நிறைந்திருக்க உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு அங்கு வந்த திருத்தந்தை, மக்கள் கூட்டத்தைச் சந்திக்க ஒருமுறை காரில் வலம் வந்தார். திருத்தந்தை வருவதற்கு முன்பிருந்தே அவர்கள் அச்சதுக்கத்திலேயே பல மொழிகளில் பாடி உயிரோட்டமாய் அச்சூழலை மாற்றிக் காத்திருந்தனர்.

பீடச்சிறார்களுக்கான பாதுகாவலர்களுள் ஒருவரான புனித தார்சியூஸ் குறித்து இன்று பீடச்சிறார்களுக்கு உரை வழங்கினார் பாப்பிறை.

3ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறுவன் தார்சியூஸ், மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு சேவையாற்றுவதில் மிகுந்த ஆர்வமுடையவனாக இருந்தான். பேரரசர் வலேரியன் கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தியபோது, சிறையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் திருநற்கருணையை எடுத்துச் செல்வது சிரமமான ஒன்றாக இருந்தது. ஆனால் சிறுவன் தார்சியூஸோ மிகுந்த பொறுப்புணர்வுடன் தைரியமாக திரு நற்கருணையை மார்போடு அணைத்து எடுத்துச் சென்றான். ஆனால் வழியில் புறவினச் சிறார்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தான். கடைசி வரை திருநற்கருணை கீழே விழாமல் தன் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றிய இச்சிறுவன் தார்சியூஸ், சான் கலிஸ்தோ அடிநிலக்கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அப்போதைய திருத்தந்தை தமாசோ தன் கைப்படவே அக்கல்லறையில் இது குறித்து எழுதியுள்ளார். அதன்படி, அப்புனிதச் சிறுவன் இறந்தது 257ம் ஆண்டு என அறிய வருகிறோம். இப்புனித தார்சியூஸ் இன்றைய பீடச்சிறார்களுக்கு நட்பு, தாராள மனம், மகிழ்வு, பயமற்ற தன்மை, திருநற்கருணை மீதான பக்தி ஆகியவற்றின் எடுத்ததுக்காட்டாகத் திகழ்வாராக என மேலும் வேண்டி தன் உரையை நிறைவுச் செய்த திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பல்வேறு மொழிகளில் தன் வாழ்த்துக்களையும் அளித்தார்.

ஒவ்வொரு மொழியிலும் அவர் வாழ்த்துத் தெரிவித்தபோது பீடச்சிறார்கள் பலமாகக் கை தட்டி வரவேற்றனர். வாழ்த்துக்களின் இறுதியில், இரஷ்யா, பாகிஸ்தான், மற்றும் ஆஃப்கானிஸ்தானில் இயற்கைப் பேரிடர்களால் துன்புறும் மக்களையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

இரஷ்யாவில் காட்டுத்தீயாலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில்

பெருவெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்பதாக உரைத்தத் திருத்தந்தை, அவர்களுடனான ஒருமைப்பாட்டை மறக்கவேண்டாம் எனவும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.