2010-08-04 16:14:23

இந்தியா - கருக்கலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மினிமாரத்தான் ஓட்டம்


ஆக.04,2010. இந்தியாவில் ஆண்டுதோறும் இடம் பெறும் கோடிக்கணக்கானக் கருக்கலைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தலத்திருச்சபை ஏற்பாடு செய்த மினிமாரத்தான் ஓட்டத்தில் சுமார் 5,000 இளையோர் கலந்து கொண்டனர்.

சீரோமலபார் வழிபாட்டுமுறையைச் சேர்ந்த, SYA என்ற சாந்தோம் இளையோர் கழகம் என்ற அமைப்பு பெங்களூரில் நடத்திய இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட இளையோர், இந்தியாவில் கருக்கலைப்பு செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தாயின் கருவில் மனித உயிர் வளரும் 9 மாதங்கள் 9 நாட்களைக் குறிக்கும் விதமாக 9.9 கிலோ மீட்டர் மினிமாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்துப் பேசிய SYA இயக்குனர் அருள்திரு Cherian Thunduparambil, கருக்கலைப்பு செய்வது மனித உரிமையைக் கடுமையாய் மீறுவதாகும் மற்றும் இது கடவுளின் விருப்பத்திற்கு எதிராய்ச் செயல்படுவதாகும் என்றார்.

இந்தியாவில் கருக்கலைப்பினால் ஆண்டுதோறும் ஏறக்குறைய 4 கோடியே 20 இலட்சம் உயிர்கள் இறக்கின்றன என்றும் அருள்திரு Cherian கூறினார்.








All the contents on this site are copyrighted ©.