2010-08-03 15:52:37

அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபை ஒன்று குரானை எரிப்பதற்குத் திட்டமிட்டு வருவதற்கு இந்தியக் கத்தோலிக்கர் கண்டனம்


ஆக.03,2010. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் இடம் பெற்ற ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி அந்நாட்டுக் கிறிஸ்தவ சபை ஒன்று குரானை எரிப்பதற்குத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளவேளை, அச்செயலுக்கு இந்தியக் கத்தோலிக்கர் தங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃப்ளாரிடா இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை குழு ஒன்று குரானை எரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக, மத்திய பிரதேச மாநில இந்திமொழி செய்தித்தாள் ஒன்று இஞ்ஞாயிறன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

Dove World Outreach Center என்ற கிறிஸ்தவக் குழுவின் இத்திட்டத்திற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்த போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, ஒரு சமயத்தின் பிம்பத்தைச் சிதைத்து, அச்சமயத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்த ஒரு செயலுக்கும் கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு வழங்காது என்று கூறியுள்ளார்.

நியுயார்க் உலக வணிக மையம் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானதன் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளன்று இவ்வாறு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ப்டடுள்ளது.

மேலும், போபால் முஸ்லீம் குழுக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இந்த வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து எதிர்ப்புப் பேரணியை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் சுமார் ஆறு கோடி மக்களுள் 91 விழுக்காட்டினர் இந்துக்கள், 6.4 விழுக்காட்டினர் முஸ்லீம்கள் மற்றும் ஒரு விழுக்காட்டுக்குக் குறைவானவர்கள் கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.