2010-08-02 15:27:31

திருத்தந்தையின் மூவேளை செப உரை.


ஆகஸ்ட் 02, 2010. கடந்த சனியன்று திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட புனித இஞ்ஞாசியார், ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட அல்போன்சுஸ் மரியா தெ கிரகரி மற்றும் இவ்வாரம் சிறப்பிக்கப்படும் புனிதர்கள் எயுசேபியுஸ், ஜான் மரிய வியான்னி ஆகியோர் பற்றி எடுத்துரைத்து இஞ்ஞாயிறு மறையுரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இந்நான்கு புனிதர்களின் தனிப்பட்ட சிறப்புப் பண்புகள் குறித்தும் உரைத்த பாப்பிறை, இப்புனிதர்கள் தங்களின் கொடைகளின் உதவியுடன் இவ்வுலகில் ஆன்மாக்களைக் காப்பாற்றவும், திருச்சபைக்குச் சேவையாற்றவும் உழைத்ததன் வழி திருச்சபையின் புதுப்பித்தலுக்கும் அதனை வளப்படுத்தவும் உதவியுள்ளனர் என்றார்.

இறைவனே அனைத்தும் என இப்புனிதர்கள் செயல் பட்டார்கள் என்பதையும் குறிப்பிட்ட பாப்பிறை, இஞ்ஞாயிறு வாசகத்திற்கும் இவர்களின் இவ்வுறுதிப்பாட்டிற்கும் இடையேயான தொடர்பையும் விளக்கினார்.

தானியங்களையெல்லாம் தன் களஞ்சியத்தில் சேமித்த மூடனான பணக்காரன் குறித்து இயேசு கூறிய உவமை பற்றிய இஞ்ஞாயிறு வாசகத்தை எடுத்தியம்பிய திருத்தந்தை, எதுவுமே நிலைத்திருப்பதில்லை என்பதை இம்மனிதன் தன் அனுபத்திலிருந்துக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றார். இளமை, சுகம் போன்றவை கடந்து போகும் நிலையில், இவைகளைச் சார்ந்து நம் வாழ்வை அமைத்துக்கொள்வது மடத்தனமானது என்ற பாப்பிறை, மேலே கூறிய புனிதர்கள் போல் நாம் இறைவனில் நம் நம்பிக்கையை வைக்கும்போது வாழ்வின் இடற்பாடுகள் குறித்து அச்சமடையத் தேவையில்லை என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.