2010-07-31 14:32:25

பிரேசில் சிறைகளில் சித்ரவதைகள் நடத்தப்படுகின்றன, திருச்சபை கவலை


ஜூலை31,2010: பிரேசில் நாட்டில் இராணுவ சர்வாதிகார ஆட்சி இடம் பெற்று 25 ஆண்டுகள் ஆகிய பின்னரும் அந்நாட்டுச் சிறைகளில் சித்ரவதைகள் நடத்தப்படுகின்றன மற்றும் அதனைச் செய்வோர் தண்டிக்கப்படாமலே விடப்படுகின்றனர் என்று அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்தது.

பிரேசில் ஆயர் பேரவையின் சிறைப்பணி ஆணையம் தயாரித்துள்ள அறிக்கை குறித்துப் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் அருட்திரு வால்டிர் ஜோவாவோ சில்வெய்ரா, சிறைகளில் சித்ரவதைகளுக்கு உள்ளான 211 பேர் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன, எனினும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

திருச்சபைப் பணியாளர்கள் சிறைகளைப் பார்வையிட்ட போதும், கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் கைதிகளின் புகார் கடிதங்களை வைத்தும் இவ்வறிக்கைத் தயாரிக்கப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்படுவதாக அக்குரு தெரிவித்தார்.

14 ஆண்டுகள் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படாமலேயே சிறையில் ஒரு கைதி இருந்திருக்கிறார் என்றும் குரு சில்வெய்ரா குறை கூறினார்.

இதற்கிடையே, பிரேசில் நீதித்துறை அமைப்பு மிக மெதுவாக இயங்குவதாகவும், சட்டத்துக்குப் புறம்பே கைது செய்யப்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் கடந்த மாதம் 21 ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் எனவும் அந்நாட்டு தேசிய நீதித்துறை அமைப்பு கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.