2010-07-31 14:28:57

நாட்டின் அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதற்குத் தனக்கி்ருக்கும் உரிமையை வலியுறுத்தியுள்ளார் வெனெசுவேலா கர்தினால்


ஜூலை31,2010: வெனெசுவேலா நாட்டு அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் மனித மாண்பைப் பாதுகாப்பதற்கும் தனக்கி்ருக்கும் உரிமையை அந்நாட்டு தேசிய அவையில் வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு கர்தினால் ஹோர்சே உரோசா சவினோ.

வெனெசுவேலா நாட்டை மார்க்சிய ஷோசலிச நாடாக அமைப்பது குறித்த அரசுத் தலைவர் ஹூகோ ஷாவேஸின் திட்டம் தொடர்பாகக் கர்தினால் சவினோ பொதுப்படையாகக் கருத்து வெளியிட்டார். இதன் காரணமாக வெனெசுவேலா நாட்டுத் தேசிய அவையில் உரையாற்ற அவர் அழைக்கப்பட்ட போது இவ்வாறு தனது உரிமையை வலியுறுத்தினார்.

அவ்வுரையின் போது, நாட்டின் அரசியல் அமைப்பு குறித்த பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட கரகாஸ் பேராயரான கர்தினால் சவினோ, பொதுநலவாழ்வில் பங்கு கொள்வதற்குத் தனக்கிருக்கும் உரிமையையும் கடமையையும் எடுத்துக் கூறினார்.

வெனெசுவேலா ஆயர்கள், நாட்டின் பொதுநல விவிகாரங்கள் பற்றித் தற்போது மட்டுமல்லாமல் எப்போதுமே வெளிப்படையாய்ப் பேசி வருகின்றனர் என்றும் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் சவினோ சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, கர்தினால் இவ்வாறு பேசுவதற்குத் தகுதியற்றவர் என்றும் மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி வருகிறார் என்றும் அரசுத்தலைவர் ஷாவேஸ் குறை கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.