2010-07-31 14:33:18

கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தம் இஞ்ஞாயிறன்று அமலுக்கு வருகிறது


ஜூலை31,2010: கொத்து வெடிகுண்டுகள் உற்பத்தி செய்வது, அவற்றைப் பயன்படுத்துவது மற்றும் அவற்றைச் சேமித்து வைப்பதைத் தடை செய்யும் சர்வதேச தடை ஒப்பந்தம் இஞ்ஞாயிறன்று அமலுக்கு வருவது குறித்தத் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர் ஐ.நா.அதிகாரிகள்.

உலக அளவில் ஆயுதங்கள் களையப்படுவதற்கும் மனிதஉரிமைகள் காக்கப்படுவதற்கும் இந்த நடவடிக்கை நல்ல உதவியாக இருக்கும் என்று அவ்வதிகாரிகள் மேலும் கூறினர்.

மிகவும் ஆபத்தானது என்று நோக்கப்படும் இவ்வாயுதங்கள் உலகில் கோடிக்கணக்கில் இருப்பதாகவும், இவற்றில் பல குண்டுகள் அண்மை மோதல்களில் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

புர்க்கினா ஃபாசோ, மொல்டோவா ஆகிய இரு நாடுகளும் இவ்வொப்பந்தத்தை அமல்படுத்துவதாகக் கடந்த பிப்ரவரியில் ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பித்ததையொட்டி இந்தச் சர்வதேச ஒப்பந்தம் இஞ்ஞாயிறன்று உலக அளவில் அமலுக்கு வருகிறது.

த்து வெடிகுண்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 98 விழுக்காட்டினர் அப்பாவி பொது மக்கள். மேலும், இவ்வெடி குண்டுகளால் இறந்துள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்களில் 40 விழுக்காட்டினர் சிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சர்வதேச ஒப்பந்தம் குறித்த முதல் கூட்டம் இவ்வாண்டு நவம்பரில் லாவோசில் இடம்பெறவிருக்கின்றது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக இடம் பெற்ற சண்டைக்குப் பின்னர் 7 கோடியே 50 இலட்சம் கொத்து வெடி குண்டுகள் வெடிக்காமல் கிடந்தன.

கிழக்கு ஆசிய நாடான இந்த லாவோசில் சண்டை முடிந்து முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆகியும் வெடிக்காமல் கிடக்கும் குண்டுகளை அகற்றும் பணி இன்னும் நடந்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.