2010-07-30 16:11:35

சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐ.நா.


ஜூலை30,2010: சுத்தமான குடிநீரும், கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.நா.பொது அவையில் பொலிவியா நாடு முன்வைத்த இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 122 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட 41 நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

உலகிலுள்ள அனைவரும் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொள்ள சர்வதேச சமூகம் தனது முன்னெடுப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

தற்சமயம் உலகெங்கும் ஏறக்குறைய 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வசதியும், 260 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குக் கழிப்பறை வசதியும் கிடைக்கவில்லை என்று கூறும் ஐ.நா.நிறுவனம், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 15 இலட்சம் சிறார்கள் குடிநீர் மற்றும் சுகாதாரமின்மை தொடர்பான நோய்களினால் இறக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.