2010-07-29 15:09:50

குடியேற்றதாரர்களுக்கான சட்டங்களை அமல் படுத்துவதற்கு முன், அச்சட்டத்தின் சில பகுதிகள் நிறுத்தப்பட்டுள்ளதை கத்தோலிக்க ஆயர்கள் வரவேற்றுள்ளனர்


ஜூலை 29, 2010 அமெரிக்காவில் அரிசோனா மாநிலம் குடியேற்றதாரர்களுக்கான சட்டங்களை அமல் படுத்துவதற்கு முன், அச்சட்டத்தின் சில பகுதிகளை அங்குள்ள நீதிபதி ஒருவர் நிறுத்தியுள்ளதை அரிசோனா பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
அரிசோனா மாநிலத்தில் குடியேற்றதாரர்களுக்கான சட்டங்கள் இவ்வியாழன் முதல் அமலுக்கு வரவிருந்த சமயத்தில், அச்சட்டங்களில் இருந்த ஒரு சில கடுமையான பகுதிகளை நீதிபதி ஒருவர் தடுத்திருப்பது, இந்த பிரச்சனையை இன்னும் மனிதாபிமானத்தோடு அணுக அரிசோனா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று ஆயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
SB 1070 என்று வழங்கப்படும் இந்தப் புதிய சட்டத்தின்படி, சரியான ஆவணங்கள் இன்றி அரிசோனாவில் வாழும் குடியேற்றதாரர்கள் குற்றவாளிகள் என்று கருதப்படவும், எனவே எந்தவித எச்சரிக்கையும் இன்றி அவர்கள் கைது செய்யப்படுவதற்கு அரசுக்கு அதிகாரம் உண்டு என்பன போன்ற கடுமையான சட்டங்கள் இடம் பெற்றிருந்ததால், இச்சட்டம் குறித்த விவாதங்கள் பல நாட்களாக அம்மாநிலத்திலும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நடை பெற்று வந்துள்ளன என்று அரிசோனா கத்தோலிக்க நிறுவனம் ஒன்றின் இயக்குனர் Ron Johnson கூறினார்.குடியேற்றதாரர் என்பது அமெரிக்க நாடு சந்தித்து வரும் ஒரு பெரும் பிரச்சனை என்றும், இந்தப் பிரச்சனையை பல்வேறு கோணங்களிலிருந்து அணுகுவதே இதற்குச் சரியான தீர்வைக் கொணரும் என்றும் Los Angeles பேராயர் கர்தினால் Roger Mahony கூறினார்.







All the contents on this site are copyrighted ©.