2010-07-28 16:57:58

திருத்தந்தையர் வரலாறு – மனஉறுதிமிக்க திருத்தந்தையர்கள்


ஜூலை28,2010: திருத்தந்தையர் வரலாறு என்ற நமது தொடரில் கடந்த வாரம் திருத்தந்தையர்கள் இரண்டாம் செலஸ்டின், இரண்டாம் லூசியுஸ், மூன்றாம் யூஜின் ஆகியோர் பற்றிப் பார்த்தோம். இந்தத் திருத்தந்தையர்கள், அரசியலுக்கும் ஆன்மீகத்துக்குமிடையே எவ்வாறு எதிர்நீச்சல் போட்டார்கள் என்பது பற்றியும் அறிந்தோம். இறுதியாக நாம் கேட்ட முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை மூன்றாம் யூஜின், புனித பூமியிலுள்ள கிறிஸ்தவ இடங்களைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். திருச்சபையில் அறநெறிவாழ்க்கை தொடர்பான விடயங்களில் கடும் நடவடிக்கை எடுத்தவர். இவர் 1153ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி இறந்தார் என்றும் அறிந்தோம். இவருக்குப் பின்னர் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றவர் திருத்தந்தை நான்காம் அனஸ்தாசியுஸ். Corrado Demetri della Suburra என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், உரோமையைச் சேர்ந்தவர். திருத்தந்தை இரண்டாம் பாஸ்கால் என்பவரால் 1114ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1130ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் இடம் பெற்ற பாப்பிறைகளின் தேர்தல்களில் பங்கெடுத்தவர். எதிர்திருத்தந்தை 2ம் அனாக்கிளேட்டுசைக் கடுமையாக எதிர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். 1153ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி திருத்தந்தையாகப் பணியைத் தொடங்கிய நான்காம் அனஸ்தாசியுஸ், 1154ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இறந்தார். இவர் தனது இந்தக் குறுகியகாலப் பாப்பிறைப் பணியில் அமைதியை ஏற்படுத்துபவராகச் செயல்பட்டார். Magdeburg ஆயராக விச்மான் என்பவரை ஏற்பது தொடர்பாக பேரரசர் முதலாம் பிரடெரிக் பார்பரோசாவுடன் நான்கு திருத்தந்தையர் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டார். உரோமையிலுள்ள பாந்தியோன் என்ற ஆலயத்தைச் சீரமைத்தார். எருசலேமின் புனித ஜான் மருத்துவமனை உதவியாளர்கள் சபைக்குச் சிறப்பு சலுகைகளை வழங்கினார். மூவொரு கடவுள் பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சில கடிதங்கள் பெரிதும் புகழப்படுகின்றன.

திருத்தந்தை நான்காம் அனஸ்தாசியுசுக்குப் பிறகு பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை நான்காம் ஏட்ரியன் (Adrian IV). அல்பானோவின் கர்தினால் நிக்கோலாஸ் (Nicholas of Albano) என்ற இவர், 1154ஆம் ஆண்டு முதல் 1159ஆம் ஆண்டுவரை பாப்பிறையாகப் பணியாற்றியவர். பாப்பிறைப் பதவி வகித்த ஒரே ஆங்கிலேயர் இவர் என்று சொல்லப்படுகின்றது. இவரது வாழ்க்கை வரலாற்றை கர்தினால் போஸோ என்பவர் எழுதி வைத்துள்ளார். 1100ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த இவர், தனது இளமைகாலக் கல்வியை புனித Albans பள்ளியில் பயின்றார். ராபர்ட் என்ற இவரது தந்தை, பின்னாளில் புனித அல்பான்ஸில் துறவியானார். திருத்தந்தை நான்காம் ஏட்ரியன், பள்ளிப் படிப்பை முடித்து பிரான்ஸ் சென்றார். அங்கு ஒரு விடுமுறையின் போது அவிஞ்ஞோனுக்கு அருகிலுள்ள புனித ரூப்பஸ் துறவுமடத்தைப் பார்வையிட்டார். பின்னர் அங்கு துறவியாக சேர்ந்து வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார். சிலகாலம் கழித்து அத்துறவுமடத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வேலை காரணமாக உரோமைக்குச் சென்ற சமயம் திருத்தந்தை மூன்றாம் யூஜின் அவரைக் கர்தினாலாக உயர்த்தி அல்பானோ மறைமாவட்ட ஆயராக நியமித்தார். 1152ம் ஆண்டில் ஒரு முக்கிய பணி தொடர்பாக, பாப்பிறையின் தூதராக ஸ்காண்டிநேவியா சென்ற போது எல்லாரின் நன்மதிப்பையும் சம்பாதித்தார். அச்சமயம் நார்வே நாட்டு Trondhjem ல், புனித ஒலாப்பின் பெயரில் உயர் மறைமாவட்டத்தை உருவாக்கினார். ஏனெனில் அந்நகர் ஆலயத்தில் புனித ஒலாப்பின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்பணியை முடித்து அவர் உரோமைக்குத் திரும்பிய போது, “வடக்கின் திருத்தூதர்” என்று போற்றப்பட்டார். அச்சமயத்தில், அதாவது 1154ம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி திருத்தந்தை நான்காம் Anastasius மரணமடையவே, கர்தினால் நிக்கோலாஸ் திருத்தந்தையாக ஒரேமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருத்தந்தை நான்காம் Adrian என்ற பெயருடன் பணியைத் தொடங்கினார்.

திருத்தந்தை 4ம் ஏட்ரியனின் பணிக்காலம் மலர்ப்படுக்கையாக அமைந்திருக்கவில்லை. சிசிலி அரசன் வில்லியம் இவரை வெளிப்படையாகவே எதிர்த்தான். பேரரசன் பிரடெரிக் பார்பரோசாவுடன் இருந்த நட்பும் மிகுந்த ஆபத்தானதாக மாறியது. Campagna விலிருந்த பண்ணையாளர்கள் ஒருவர் ஒருவரோடும் திருத்தந்தையோடும் மோதினர். அரண்மனைகளையும் நாட்டையும் சூறையாடினர். உரோமைக்குத் திருத்தூதர்கள் கல்லறைகளைத் தரிசிக்க வந்தத் திருப்பயணிகளின் பொருட்களையும் களவாடினர். பிரேஷா நகரின் அர்னால்டு தலைமையில் வெளிப்படையாகப் புரட்சியே வெடித்தது. கர்தினால் ஜெரார்டுஸ் என்பவர் மிகவும் கொடூரமாய்த் தாக்கப்பட்டார். உறுதிகொண்ட நெஞ்சினரான திருத்தந்தை ஏட்ரியன், புனித வாரப் புதன்வரை உரோமையில் எந்த சமய நிகழ்ச்சிகளும் நடைபெறுவதைத் தடை செய்தார். அவரும் வித்தெர்போ என்ற நகருக்குச் சென்று விட்டார். பின்னர் குருக்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகளின் வேண்டுகோளின் பேரில் செனட்டர்கள் திருத்தந்தையிடம் சென்று மன்னிப்பை இறைஞ்சினார்கள். அதனால் சமய வழிபாடுகள் மீது விதித்திருந்த தடையை நீக்கினார் திருத்தந்தை. அத்துடன் அவர் உரோமைக்கும் திரும்பினார். புரட்சி செய்த அர்னால்டு நகரைவிட்டுத் தப்பித்துச் சென்றாலும் பின்னர் பிடித்து வரப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான்.

இதற்கிடையே, பேரரசன் பார்பரோசா உரோமையில் திருத்தந்தையின் கரங்களால் முடிசூட்டப்பட விரும்பி, பவியாவில் இரும்புக் கிரீடத்தைப் பெற்று லொம்பார்தி வழியாக பாப்பிறை நிலப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தான். அப்போதைய ஐரோப்பாவின் மிகவும் பலம்வாய்ந்த ஆட்சியாளர் Hohenstauffen க்கும் அப்போதைய புகழ்பெற்ற புனித Rufus துறவு மடத்தின் ஓர் ஆன்மீக குருவுக்குமிடையே உரோமைக்கு ஏறத்தாழ முப்பது மைல்கள் தூரத்திலிருந்த Sutri எனுமிடத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் திருத்தந்தை பேரரசனைச் சந்திக்கச் சென்றார். அக்கால வழக்கப்படி பேரரசர் திருத்தந்தையைச் சந்தித்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்தும் சடங்குகளில் ஒன்றாக, திருத்தந்தை குதிரையிலிருந்து இறங்கும் பொழுது அவரது கால் தரையில் ஊன்றப்படுமுன்னர் பேரரசர் அதனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். ஆனால் இந்தப் பேரரசன் பி்ரெட்ரிக் பார்பரோசா, அன்று அவ்வாறு செய்யவில்லை. இருந்த போதிலும் திருத்தந்தை குதிரையிலிருந்து இறங்கினார். பேரரசன் அவரை ஒரு நாற்காலியில் அமரச் செய்து அவரது மிதியடிகளை முத்தமிட்டார். பின்னர் திருத்தந்தை பேரரசருக்குச் சமாதான முத்தம் அளிக்க வேண்டும். ஆனால் திருத்தந்தை அதனைச் செய்ய மறுத்தார். பேரரசன் தனக்கு முழு மரியாதை செலுத்தும்வரை தானும் இதனைச் செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாயிருந்தார். அதாவது அவனைப் பேரரசனாக முடிசூட்டப் போவதில்லை என்று சொன்னார். வேறு வழியின்றி பேரரசன் அதற்கு ஒத்துக் கொண்டார். அவ்வாண்டு ஜூன் 11ம் தேதி நேப்பியில் மற்றுமொரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. பேரரசன் வழக்கமானச் சடங்குகளைச் செய்தான். இத்துடன் இப்பிரச்சனையும் முடிந்தது. பின்னர் பேரரசன் உரோம் புனித பேதுரு பசிலிக்காவில் முடிசூட்டப்பட்டார். பழங்கால வழக்கப்படி உறுதிமொழிகளையும் எடுத்தார்.

இந்த நிகழ்வு நடக்கும் பொழுது, “லியோனின் நகரம்” என அழைக்கப்படும் உரோம் புறநகர்ப் பகுதியைப் பாதுகாப்பதற்காகப் பேரரசனின் படைகள் புனித ஆஞ்சலோ பாலத்தில் அல்லது அதற்கருகில் நிறுத்தப்பட்டிருக்கும். ஆயினும் இந்தப்பாலம் குடியரசுப் படைகளால் குண்டு வைத்துத் தாக்கப்பட்டது. உரோமையர்களுக்கும் பேரரசனின் படைகளுக்குமிடையே கடும் சண்டை நடந்தது. இறுதியில் உரோமையர்கள் தோற்றனர். அவர்களில் பெரும்பாலானத் தலைவர்கள் உட்பட 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர் அல்லது டைபர் நதியில் மூழ்கி இறந்தனர். இருந்தாலும் உரோமைக் குடிமக்கள் பேரரசனிடம் நகரைக் கையளிக்க மறுத்தனர். அத்துடன் நார்மன்களுக்கு எதிராகத் திருத்தந்தைக்கு உதவவும் பேரரசன் மறுத்தான். நகரின் மீதான தனது ஆதிக்கத்தை குறைக்கவும் இல்லை. அச்சமயத்தில் அவனது படைகள் மலேரியாவினால் தாக்கப்பட்டன. இதனால் உரோம் நகர் மீதான தனது ஆதிக்கத்தைக் கைவிடத் துணிந்தான் என்று வரலாற்று ஆசிரியர் Gregorovius, உரோம் நகர வரலாறு குறித்த தனது பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பேரரசன் உரோமைவிட்டுப் போகும் வழியில் சாம்பலானான். திருத்தந்தையைக் கைவிட்ட அவன் தனது தலைவிதியைத் தானே நிர்யணயித்துக் கொண்டான் என்று ஒரு வரலாற்று குறிப்பு கூறுகிறது.

தந்தையின் இறப்புக்குப் பின்னர் சிசிலி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தான் முதலாம் வில்லியம். இது நடந்தது 1154ம் ஆண்டு பிப்ரவரியில். பிரடெரிக் பார்பரோசாவின் மகனான இவரை திருத்தந்தை 4ம் ஏட்ரியன் அரசனாக அங்கீகரிக்கவில்லை. எனவே காழ்ப்புணர்வுகள் வளர்ந்தன. சிசிலிக்காரர்கள் Beneventum வரை வந்து தென் Campagna வைச் சூறையாடினர் இதனால் முதலாம் வில்லியத்தைத் திருத்தந்தை திருச்சபைக்குப் புறம்பாக்கினார். திருத்தந்தை ஏட்ரியன் பேரரசனின் படைக்கலங்களைச் சேகரித்து Beneventum வரை சென்று அங்கு 1156ம் ஆண்டு ஜூன்வரை தங்கியிருந்தார். அச்சமயத்தில்தான் சாலிஸ்பர்க்கின் ஜான் அவரோடு மூன்று மாதங்கள் தங்கியிருந்து அவரிடமிருந்து “அந்த புகழ்பெற்ற அயர்லாந்து நன்கொடையை”ப் பெற்றார். இதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.








All the contents on this site are copyrighted ©.