2010-07-28 16:57:35

ஜூலை 29 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்தச் சாலை வழியே மாநகரப் பேருந்து கடந்து செல்லும் போதெல்லாம் கண்கள் குளமாகிவிடும். எத்தனையோ உயிர்களை இரக்கமின்றி இறக்க வைத்த வாகனங்கள் எப்போதும் போல அந்தச் சாலையில் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் நெஞ்சுக்கு நெருக்கமான அந்த உயர்ந்த உள்ளத்தை, என்று அந்தச் சாலை காவு கொண்டதோ அன்றுமுதல் அந்தச் சாலை வழியாகக் கடந்து செல்லும் போதெல்லாம் மனத்தில் ஒருவித வேதனையும், வலியும், கோபமும், இயலாமையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அந்தச் சாலையில் வாகனத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டு துடிதுடிக்க இறுதி மூச்சை விட்ட அந்த உள்ளத்தின் பாசமும் நேசமும் அவ்வளவு உயர்ந்தவை. அந்த உள்ளம் இந்த உலகுக்கு விடைசொல்லி ஆண்டுகள் பல கடந்தாலும் அது பற்றிய நினைவுகள் மட்டும் இன்றுவரை மறைய மறுக்கின்றன. உண்மை அன்புக்கு விலையே இல்லை. வாழ்க்கையில் உடைந்து போனபொழுதெல்லாம், தளர்ந்து போனபொழுதெல்லாம், அந்த உயிரின் வார்த்தைகள் ஆறுதலாக வந்து அணைத்திருக்கின்றன. தவிர்த்தலுக்கென்று ஒரு பார்வையை வைத்திருக்கும் என் இதயம், தவிப்பதற்கென்றும் இடத்தை வைத்திருக்கின்றது.

ஆனாலும் இந்தவிதமான ஆழ்ந்த நட்பும் அன்பும்கூட சிலசமயங்களில் ஆட்டம் காண்கின்றன. அவை அதிர்ச்சியையும் தளர்ச்சியையும் அனுபவிக்கின்றன. ஏமாற்றங்களையும் தடுமாற்றங்களையும்கூட சந்திக்கின்றன. இத்தகைய நிலைகள் உறவுகளை வலுப்படுத்தலாம் அல்லது சிதைக்கவும் செய்யலாம். எனினும் அன்பர்கள் ஒருவர் ஒருவரது குறைகளைப் பெரிதுபடுத்தாமல் நிறைகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் புரிதலோடு செயல்பட்டால் உறவுகள் ஆழப்படும்.

அடுத்தவர் காலணியை வாங்கி அணிந்து பார். அதன்பின் அவர்கள் கேட்கும் புதுக்காலணியை வாங்கிக் கொடுக்க மறுக்கமாட்டாய் என்கிறார் ஓர் அறிஞர்.







All the contents on this site are copyrighted ©.