2010-07-27 15:04:41

உலகின் பாரம்பரியச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - யுனெஸ்கோ


ஜூலை27,2010: ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கலாச்சார மற்றும் இயற்கை சார்ந்த உலகப் பாராம்பரியச் சொத்துக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இடங்கள், வெப்பநிலை மாற்றம், நகர்மயமாதல் போன்றவைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஐ.நா.அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஹெய்ட்டி மற்றும் சிலே நாடுகளில் இடம் பெற்ற நிலநடுக்கங்கள், போலந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, உகாண்டாவில் ஏற்பட்ட தீ விபத்து, பெருவில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் போன்ற அண்மை இயற்கைப் பேரழிவுகளால் உலகின் புராதனச் சொத்துக்கள் அழியக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன என்று யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் Irina Bokova அறிவித்தார்.

இப்பாரம்பரியச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

பிரேசில் நாட்டு பிரேசிலியாவில் உலகப் பாராம்பரியச் சொத்துக்கள் குழு தொடங்கியுள்ள கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய Bokova, கலாச்சாரத்துக்கு ஏற்படுத்தப்படும் சேதம் மனித உணர்வையும் காயப்படுத்துகின்றது என்று கூறினார்.

ஹெய்ட்டி நாட்டில் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 17ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட Jacmel நகரமும், தலைநகர் Port-au-Prince ல் பேராலயம், தேசிய அரண்மனை, நீதிமன்றம் உட்பட அந்நகர உள்கட்டமைப்பும் பெருமளவாகச் சேதமடைந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார் Bokova.

உலக அளவில் சிறப்பான மதிப்பைக் கொண்டுள்ளதாக 148 நாடுகளின் 890 சொத்துக்கள் தற்சமயம் உலகின் பாராம்பரியச் சொத்துக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.








All the contents on this site are copyrighted ©.