2010-07-26 15:41:37

திருத்தூதர் புனித யாக்கோபின் விழாவை திருத்தந்தை நினைவுகூர்ந்தார்


ஜூலை 26, 2010 இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பல மொழிகளில் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, ஸ்பெயினின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவில் புனித யாக்கோபின் கல்லறை அமைந்துள்ள இடத்தில் கூடியிருந்த விசுவாசிகளை வாழ்த்தினார்.
ஸ்பெயின் நாடு தனது பாதுகாவலரான திருத்தூதர் புனித யாக்கோபின் விழாவை இஞ்ஞாயிறன்று சிறப்பித்ததை நினைவுகூர்ந்த அவர், வருகிற நவம்பரில் தான் சந்தியாகோவிற்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை ஆவலுடன் எதிர்நோக்குவதாகக் கூறினார்.
“பெரியவர்” என்று அறியப்பட்ட திருத்தூதர் புனித யாக்கோபு தனது தந்தையையும் தனது மீன்பிடித் தொழிலையும் கைவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்ததில் திருத்தூதர்களில் முதன்மையானவராக இருக்கிறார் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.
இப்புனிதர் கொம்போஸ்தெல்லாவில் எப்பொழுதும் போற்றப்படுகிறார், இப்புனிதரது தாக்கம் ஸ்பானிய மொழி பேசும் நாடுகளிலும் இருக்கின்றது என்றார் அவர்.கொம்போஸ்தெல்லா புனித ஆண்டாகிய இவ்வாண்டில் இத்திருத்தூதரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி விசுவாசம், பற்றுறுதி மற்றும் பிறரன்புக்குச் சாட்சிகளாகத் தொடர்ந்து வாழ்வோம் என்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.