2010-07-26 15:41:48

ஜெர்மனி இசை விழா நெரிசலில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை செபம்


ஜூலை 26, 2010 இன்னும், சனிக்கிழமையன்று ஜெர்மனியில் இடம் பெற்ற பிரமாண்டமான இசைவிழாவில், நெரிசலில் மிதிபட்டு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுடனானத் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் இந்தக் கோரச் சம்பவம் பற்றியும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஜெர்மனியின் டியூஸ்பெர்க் நகரில் இடம் பெற்ற இத்துயரச் சம்பவத்தில் பல இளையோர் இறந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் அறிந்தேன், இவர்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தூய ஆவி ஆறுதல் தருமாறு தான் செபிப்பதாகத் தெரிவித்தார்.
"Love Parade," என்றழைக்கப்படும் இந்த இசை விழாவில் சுமார் 15 இலட்சம் பேர் பங்கேற்கச் சென்றனர் என்றும், குறுகிய சுரங்கப் பாதையில் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்ல முற்பட்ட போது மிதிபட்டு சுமார் 19 பேர் இறந்தனர் என்றும் 340 பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.1989ம் ஆண்டு பெர்லினில் தொடங்கிய இந்த இசைவிழா, ஆண்டுதோறும் பல்வேறு நகரங்களி்ல் நடைபெறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.