2010-07-26 15:37:53

சாதனைகள் சாத்தியங்கள்


ஜூலை26,2010. அRealAudioMP3 டிக்கடி மகிழ்ச்சியாகச் சிரிப்பதும், பிறரை மிகவும் அன்பு செய்வதும், புத்திசாலிகளின் மரியாதைக்குத் தகுதியாவதும், குழந்தைகளின் பாசத்தைப் பெறுவதும், நேர்மையான விமர்சகர்களின் அங்கீகாரத்தைச் சம்பாதிப்பதும், பொய்யான நண்பர்களின் வஞ்சகத்தைச் சகித்துக் கொள்வதும், அழகை ஆராதிப்பதும், பிறரிடத்து அமைந்துள்ள சிறப்புகளைக் கண்டுபிடிப்பதும், தன்னையே கொடுத்துப் பிரதிபலன் பெறுவது பற்றிச் சிறு சிந்தனையும் இல்லாதிருப்பதும், இன்னும், குழந்தையை அடைதல், ஓர் ஆன்மாவை மீட்டல், ஒரு மலர்வனத்தை அமைத்தல் அல்லது ஒரு சமூகத்தை உயர்த்தல் போன்ற ஏதாவது ஒரு பணியைச் செய்து முடித்திருப்பதும், உற்சாகத்தோடு விளையாடிச் சிரிப்பதும், பெருமகிழ்ச்சியோடுப் பாடியிருப்பதும், ஓர் உயிர் நன்மையடைந்தது என்பதை அறிந்திருப்பதும் – இவ்வாறு நீங்கள் வாழ்ந்தால், இவை நீங்கள் வெற்றி பெற்றிருப்பதற்கானச் சான்றுகளாகும். வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்து, தனது பெயரைப் பதிவு செய்யாமல் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்.

வாழ்க்கையில் வெற்றி என்றால் என்ன? அந்த வெற்றியை நாம் எப்படி விளக்குவது? அந்த வெற்றிக்கு நாம் எவ்வாறு இலக்கணம் எழுதுவது? இதற்கு எளிதான ஒரு வழி என்னவென்றால் வரலாற்றில் வெற்றி அடைந்தவர்கள் பற்றித் தெரிந்து கொள்வதாகும். உலகம் தோன்றியது முதல் இன்றைய நாள்வரை, ஆன்மீகமோ, அறிவியலோ, அரசியலோ, பொருளாதாரமோ, வணிகமோ, தகவல் தொழில்நுட்பமோ, மருத்துவமோ, விளையாட்டோ, சமூக வாழ்க்கையோ எனக் குறைந்தது ஏதாவது ஒருதுறையில் சிலர் சாதனை படைத்து வருகிறார்கள். இவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை மனிதர்களாகப் புகழப்படுகிறவர்களின் சாதனைகளை மட்டுமல்ல, அவர்களின் சாதனைகளுக்குக் காரணமானப் பண்புகளையும் ஊடகங்கள் உலகறியச் செய்கின்றன. இம்மனிதர்களின் சாதனைகளும் மற்றவர் பின்பற்ற வேண்டிய சில தடங்களை விட்டுச் செல்கின்றன. கடந்த சில நாட்களில் நாம் அறிய வந்த சில உலகச் சாதனையாளர்கள் பற்றிப் பார்ப்போமே.

பிரான்ஸ் நாட்டு Avignon என்ற நகரத்திற்கு அருகில் நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து வரும் Notre-Dame de l'Annonciation என்ற கன்னியர்இல்ல அருட்சகோதரிகள், கிரகோரியன் இசை குறுந்தகடு தயாரிப்பில் Decca ஒலிப்பதிவு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த அருட்சகோதரிகளின் பெனடிக்ட் துறவு சபை ஆறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாகும். இந்த அருட்சகோதரிகள், திருவழிபாடுகளில் பாடப்படும் கிரகோரியன் இசையை மிக நேர்த்தியாகப் பாடுகிறவர்கள். இவர்கள், தங்களது கன்னியர் இல்லத்தைவிட்டு வெளியே வராமல் எந்நேரமும் செபத்திலும் செபத்தோடு இணைந்த வேலையிலும் ஈடுபட்டு வருபவர்கள். இந்த ஒப்பந்தத்தைக்கூட, ஜன்னல் கம்பிகள் வழியாகவே அந்த இல்லத்தலைவியிடம் தான் கொடுத்ததாக டெக்கா கம்பெனியின் நிர்வாக இயக்குனர் Dickon Stainer பிபிசியில் கூறியிருக்கிறார். “அவிஞ்ஞோனிலிருந்து பாடல்” என்ற தலைப்பில் இக்கன்னியர்கள் பாடிய ஆன்மீகப் பாடல்கள் குறுந்தகடு வருகிற நவம்பரில் வெளிவரவிருக்கின்றது. இந்தப் பாடல்கள் மக்கள் வாழ்க்கையைத் தொடும், மக்கள் அவற்றின் வழியாக மனஅமைதியைக் கண்டடைவார்கள் என்ற நோக்கத்திற்காகவே இந்த ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திடுவதாக அந்தக் கன்னியர்இல்லத் தலைவி கூறியிருக்கிறார். இதே டெக்கா நிறுவனம், 2008ம் ஆண்டில் சிஸ்டர்சியன் சபை ஆண் துறவிகளிடம் இதே மாதிரியான ஒப்பந்தம் ஒன்று செய்தது. அதன்படி வெளியான “விண்ணகத்திற்கான இசை” என்ற தலைப்பிலானக் குறுந்தகடுகள் பத்து இலட்சத்திற்கு மேல் விற்று சாதனை படைத்தன. நேயர்களே, பிறர் உய்வு பெற வேண்டும் என்ற இந்தத் துறவிகளின் உயரிய நோக்கம் சாதனையையும் வெற்றியையும் குவித்திருக்கின்றது.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இந்த இலங்கைத் தமிழரின் வெற்றிச் செய்தியை கடந்த வியாழன், வெள்ளி தினங்களில் வெளியிட்ட ஊடகங்கள், அவரின் இந்த உலக சாதனைக்கானக் காரணத்தையும் குறிப்பிட மறக்கவில்லை. முரளிதரனது மனஉறுதியும், தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்கிற விடாமுயற்சியும் கடின உழைப்பும் இந்த அவரது திறமையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன என்று பாராட்டியிருந்தன. ஏற்கெனவே 132 ஆட்டங்களில் விளையாடி 792 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் முரளிதரன். கடைசி டெஸ்டில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 800 விக்கெட்டுகளை என்ற இலக்கை அடையும் எண்ணத்தோடு கடும் பயிற்சியையும் இவர் மேற்கொண்டார். சாதனையும் படைத்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றியோடு ஓய்வுபெறும் வாய்ப்பு கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த எல்லோருக்கும் கிடைத்ததில்லை. ஆனால் அந்தப் பெருமை சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரனுக்கு கிடைத்தது பெருமைக்குரியது என ஊடகங்கள் பாராட்டியுள்ளன. எனவே கடின உழைப்பும், மனவுறுதியும் விடா முயற்சியும் வெற்றிகளை அள்ளித் தருகின்றன.

இவைமட்டும்தானா வெற்றிக்கானப் பண்புகள்! இதோ, எனது வெற்றிக்குத் தன்னம்பிக்கையே காரணம் என்கிறார் கிராமப் பெண் தேவிபாலா! தர்மபுரி மாவட்டத்தின் அமானிமல்லாபுரம் என்ற ஊராட்சியில் சலூன் கடை வைத்து நடத்துகிறார் தேவிபாலா. 'ஆண்களுக்கு முடிவெட்டுகிறோமே' என்பதில் தயக்கம் எதுவுமின்றி சகஜமாக கத்தரியை இயக்கிக் கொண்டிருக்கும் தேவிபாலாவின் தந்தையும் ஒரு சவரத் தொழிலாளிதான். இவர், எட்டு வருடங்களுக்கு முன்னர் திடீரென்று இறந்துவிட்டார். தேவிபாலாவின் இரண்டு அண்ணன்களும், அக்காவும் கல்யாணம் முடிந்து வெவ்வேறு ஊர்களில் இருக்கின்றனர். அப்பாவின் இறப்புக்குப் பின்னர் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டதால், சிறுவயதில் அப்பா கற்றுக் கொடுத்தத் தொழிலைத் துணிச்சலுடன் செய்து வருகிறார். தேவிபாலாவின் தந்தையின் காலத்திலிருந்து 30 ஆண்டுகளாக வாடிக்கையாளராக இருக்கும் சங்கரன் என்பவர் ஓர் ஊடகத்திடம் தேவிபாலா பற்றி நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார் - "அவங்க அப்பா இறந்தப்ப, தேவிபாலா 12 வயசுப் பொண்ணு. உண்மையிலேயே அசாத்திய மன தைரியம்னுதான் சொல்லணும். பத்து நாள் வீட்டுல முடங்கிக் கிடந்துட்டு திடீர்னு முடிவெடுத்து 'அப்பாவோட தொழிலை நான் செய்யுறேன்'னு கிளம்பிடுச்சு. ஆரம்பத்துல கடை எதுவும் வைக்காம வீடு வீடாப் போய் சவரம் செய்ய ஆரம்பிச்சது. ஆனாலும் நம்பிக்கையோட ஒரு சின்ன ஓலைக் குடிசை போட்டு, அதுல கடை நடத்துச்சு. மூணு வருஷத்துக்கு முன்ன ஒரு கடையை வாடகைக்கு எடுத்துத் தொழில் நடத்துற அளவுக்கு முன்னேறி இருக்கு" என்று.

இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் முதல் வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தவர் சாதனை மன்னர் கஷாபா தாதா சாகேப் ஜாதவ். இவர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி வறுமையில் இருந்த போதும் இவர் மேற்கொண்ட விடா முயற்சியே இவ்வெற்றிக்குக் காரணம். 1926-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த ஜாதவ் சிறு வயது முதலே மல்யுத்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 1948-ம் ஆண்டு இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார். போட்டிகளில் பங்கேற்றாலும் அவரால் பதக்கம் வெல்ல இயலவில்லை. கடும் பயிற்சி மேற்கொண்ட அவர் 1952-ம் ஆண்டு பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 52 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பினார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் முறையாக பதக்கம் பெற்று தந்த பெருமையை அவர் பெற்றார். தனிநபர் போட்டிகளில் இந்தியா பெற்ற முதல் பதக்கமும் இதுவே. மல்யுத்தத்தில் அவருக்கு பிறகு 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சுஷில்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். வருகிற அக்டோபர் 3 முதல் 14 வரை தில்லியில் நடைபெறவுள்ள 19வது காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு மல்யுத்தத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்துக்கு ஜாதவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கம் உலகத்தரம் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியால் உயர்ந்து பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர்தான் அப்துல் கலாம். எனவே நேயர்களே, சாதனை மன்னர் என்ற பெயர் வாங்க வேண்டுமா? தன்னம்பிக்கையும் மனஉறுதியும் கடின உழைப்பும் விடா முயற்சியும் பிறர் வாழ வேண்டுமென்ற உயரிய நோக்கமும் இருந்தாலே போதும் என்று இந்தச் சாதனையாளர்கள் பாடம் சொல்லித் தருகின்றனர். ஏர்ல் நைட்டிங்கேல் என்பவர், “ஒரு மதிப்புவாய்ந்த இலக்கை படிப்படியாக அடைதலே வெற்றி” என்கிறார். ஆயினும் இந்த வெற்றியை அடைவதற்குச் சில தடைகளும் இருக்கின்றன.

தான் என்ற அகந்தை, தோல்வி-வெற்றி இவை பற்றிய பயம், தன்னைப்பற்றிய நல்லெண்ணம் இல்லாமை, திட்டமிடாமை, இலக்குகளை வகுத்துக் கொள்ளாமை, மனதை ஒருமுகப்படுத்தாமை, வேலைகளைத் தள்ளிப் போடுதல், குடும்பப் பொறுப்புகள் என்று சாக்கு சொல்தல், மனக்குழப்பம், பணத்திற்காக நோக்கத்தைத் தள்ளிப் போடுதல், அதிகமான வேலைகளைத் தனியே செய்தல், அதிகப்படியான கடமைப் பொறுப்பு, பயிற்சியின்மை, விடா முயற்சியின்மை, முன்னுரிமைகளின்மை.

நேயர்களே, வாழ்க்கையில் வெறுமனே வெற்றி மட்டும் இருந்தால் போதாதது. சாதனை மன்னன் என்று வெறுமனே பெயர் வாங்கினால் மட்டும் போதாதது. உங்கள் வாழ்க்கை வெற்றியைக் கொண்டாட உங்களோடு மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். ஏனெனில் வெற்றியும் மகிழ்வும் இணைந்தே செல்வதுதான் வாழ்க்கை. ஆதலால் வாழ்க்கையை முழுவதுமாக உணர்ந்து வாழுங்கள். ஜான் ரோடஸ் சொல்கிறார் – எதையும் பார்த்தால் மட்டும் போதாதது. அதைக் கருத்துடன் கவனியுங்கள். எதையும் வாசித்தால் மட்டும் போதாதது. வாசித்தக் கருத்துக்களை உள்வாங்குங்கள். பிறர் பேசுவதைக் கேட்டால் மட்டும் போதாதது. கேட்கும் வார்த்தைகளை உள்வாங்குங்கள் என்று.








All the contents on this site are copyrighted ©.