2010-07-24 15:12:01

குடியேற்றதாரரின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு ஐ.நா. அழைப்பு


ஜூலை24,2010. குடியேற்றதாரர்கள் அவர்கள் குடியேறியுள்ள நாடுகளில் தொடர்ந்து பாகுபாடுகளையும் சுரண்டல்களையும் மற்றும் பிற மனித உரிமை மீறல்களையும் எதிர்கொள்கின்றனர் என்று சொல்லி அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர்.

எண்ணற்ற குடியேற்றதாரர், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமை மீறல்களைத் தினமும் சந்திக்கின்றனர் என்றும், நலவாழ்வு, குடியிருப்பு, அத்தியாவசியச் சமூகப் பாதுகாப்பு போன்றவைகளுக்கான வசதிகள் மறுக்கப்படுகின்றன என்றும் மனித உரிமைகளுக்கான உதவிப் பொதுச் செயலர் Ivan Šimonovic கூறினார்.

ECOSOC என்ற ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக அவைக்கு அறிக்கை சமர்ப்பித்த Šimonovic, தங்களின் சொந்த நாடுகளுக்கு வெளியே வாழும் சுமார் 21 கோடியே 40 இலட்சம் மக்கள் அவர்கள் வாழும் நாடுகளுக்குப் பயனாக இருந்தாலும் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு வேலை செய்யும் குடியேற்றதாரர் 24 மணி நேரமும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாயும் அவர்கள் வீடுகளில் தங்குவதற்குப் போதுமான இடவசதி இல்லை எனவும் அவர் குறை கூறியுள்ளார்.

குடியேற்றதார வேலையாட்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான உலக ஒப்பந்தம் 1990ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இதனை சுமார் 43 நாடுகள் அமல்படுத்தியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.