2010-07-22 15:22:52

புது டில்லியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


ஜூலை 22, 2010 ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இப்புதனன்று புது டில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, தலித் கிறிஸ்தவர்கள் தேசியக் கழகம், இந்தியக் கிறிஸ்தவர்கள் கழகம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தாழ்த்தப்பட்ட இந்துக்கள், புத்தர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் உரிமைகள் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கையைப் பலமுறை அரசுக்கு சமர்ப்பித்துள்ள தலித் கிறிஸ்தவர்கள், இறுதியாக இந்தக் கோரிக்கையை மீண்டும் அரசின் கவனத்திற்கு 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டுவந்த போதிலும், இன்னும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இந்த ஆர்ப்பாட்டத்திற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையம் - (The National Commission for Scheduled Castes (NCSC) - இந்த சட்டத்திருத்தத்தை அரசுக்குப் பரிந்துரைத்துள்ள போதிலும், அரசு இந்த சட்டத்திருத்தத்தை இன்னும் கொண்டுவராமல் தாமதிப்பது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்று என இந்திய ஆயர் பேரவை தலித் கிறிஸ்தவ ஆணையத்தின் செயலர் அருள்தந்தை காஸ்மோன் ஆரோக்கியராஜ் கூறினார்.
இந்தியாவில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் வழிகாட்டிகளில் ஒருவராக இருக்கும் தனக்கு தலித் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் இந்தப் பாகுபாடு மிகவும் மன வேதனையை அளிக்கிறது என்று இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் கூறினார்.சமய சார்பற்ற நிலை, குடியரசின் உரிமைகள் இவற்றை முன்னிலைப்படுத்தும் இவ்வரசு அவைகளை நடைமுறைப் படுத்துவதில் தாமதிப்பது மிகவும் வேதனைக்குரியது என்று ஆயர் நீதிநாதன் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.