2010-07-20 16:04:46

விவிலியத் தேடல்:


RealAudioMP3
"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி, குறுகத்தரித்த குறள்..." அணுவைத் துளைப்பது, கடலைப் புகட்டுவது, அதுவும் ஏழு கடல்களைப் புகட்டுவது... அற்புதமான கற்பனை. இந்த அற்புத கற்பனை வழியாகத் திருக்குறளின் பெருமையை ஔவையார் சொல்லிச் சென்றார்.
திருக்குறளுக்கு உள்ள இந்தப் பெருமை விவிலியத்தின் பல பகுதிகளுக்கும் உண்டு. திருப்பாடல் 23க்கு இந்தப் பெருமை நிச்சயம் உண்டு. எனவேதான், இந்தத் திருப்பாடலின் ஒவ்வொரு வரியையும் திரும்பத் திரும்ப வாசிக்கும் போது, ஏழு கடல்கள் அளவிற்கு எண்ணங்கள் கொட்டுவதை உணரலாம்.
இந்தத் திருப்பாடலைப் பற்றி விவிலியத் தேடலில் மூன்று வாரங்களுக்கு முன் நான் ஆரம்பித்த போது, நமது தேடல், நமது பகிர்வுகள் நிச்சயம் ஒரு சில வாரங்களாவது தொடரும் என்று சொல்லியிருந்தேன். அப்போது ஏழு அல்லது எட்டு வாரங்கள் ஆகும் என்று நானாக மனக்கணக்கு போட்டு வைத்திருந்தேன்.
இது நாலாவது வாரம். இந்தத் திருப்பாடலைப் பற்றிய ஆரம்ப சிந்தனைகளே இன்னும் தொடர்கின்றன. இது எனக்கேக் கொஞ்சம் ஆச்சரியம்தான். இந்த 23ம் திருப்பாடலின் விளக்கங்கள் முடிவதற்குள் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கலாம். இறைவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல அடைமொழிகளில் எனக்குப் பிடித்த அடைமொழி The God of Surprises... அதாவது, ஆச்சரியங்களின் பிறப்பிடம் இறைவன் என்ற அடைமொழி. தொடர்வோம் நம் தேடலை, பெறுவோம் ஆச்சரியங்களை.
23ம் திருப்பாடலைத் தாவீது எழுதினார் என்பது பரவலான ஒரு கருத்து. இந்தப் பாடலை அவர் தன் வாழ்வின் இறுதியில் எழுதியிருக்கலாம் என்பதும் மற்றொரு பரவலானக் கருத்து.
வாழ்வின் இறுதியில், முதிர்ந்த வயதில், வாழ்வைப் பற்றியப் பல தெளிவுகள் ஏற்படும். நடந்து வந்த பாதையை மீண்டும் பார்க்கும் போது, அதில் கற்றுக் கொண்ட பாடங்களை மீண்டும் அசைபோடும் நாம், அந்தப் பாடங்களை அடுத்த சந்ததியினருக்கு வழங்க முயற்சி செய்வோம். "அந்த காலத்துல...", அல்லது, "பிரிட்டிஷ் காரன் காலத்துல..." என்று நீட்டி முழங்கி ஆரம்பமாகும் இந்தக் கதைகளைக் கேட்க ஒருவேளை அடுத்த சந்ததியினருக்கு நேரம் இல்லாமல் போகலாம். ஆனால், அதற்காக, இந்த வாழ்வுப் பாடங்களைப் பெரியவர்கள் பகிராமல் சென்றுவிட்டால், மனித அனுபவங்கள் எனும் கடல் வறண்டு போகும். நல்ல வேளை, தாவீது தன் வாழ்வுப் பாடங்களைத் திருப்பாடல்கள் வழியே தாராளமாக வழங்கிச் சென்றுள்ளார். அதுவும், திருப்பாடல் 23 என்ற ‘அணுவைத் துளைத்து, ஏழு கடலைப் புகட்டிச்’ சென்றுள்ளார்.

23ம் திருப்பாடல் ஒரு செபமா? அப்படித் தெரியவில்லை. ஓ இறைவா... என் இறைவா... என்று பல திருப்பாடல்களில் பாடலாசிரியர் இறைவனை அழைத்துப் பேசியிருப்பது போல் இந்தத் திருப்பாடலில் இறைவனைக் கூப்பிடவில்லை. ஆண்டவர் என் ஆயர் என்ற ஒரு கூற்றுடன் ஆரம்பமாகிறது இந்தப் பாடல். ஆனாலும், நாம் இந்தத் திருப்பாடலை அழகானதொரு செபமாகத்தான் பயன்படுத்துகிறோம்.
இந்தத் திருப்பாடல் புகார்களின் பட்டியலும் அல்ல. வேறு பலத் திருப்பாடல்களில் புகார்களின் பட்டியல்கள் நீளமாக உள்ளன. ஆனால், இந்தத் திருப்பாடலில் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் வரிகளே அதிகம். எனவே, இதை ஒரு நன்றி நவிலல் எனக் கருதலாம்.
வழக்கமாக, விழாவொன்று நடந்தால், இறுதி நிகழ்வாக நன்றிகள் சொல்லப்படும். தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்த தாவீது, தன் வாழ்வை ஒரு விழாவாகப் பார்த்ததால், இந்த நன்றிப் பாடலைப் பாடினாரோ? அவர் வாழ்வு அப்படி ஒன்றும் விழாக்கோலமாய் இருந்ததைப் போல் தெரியவில்லையே. அவர் வாழ்விலும் எத்தனையோ இழப்புகள், துயரங்கள் இருந்தன. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயனாய் பசும் புல்வெளிகளில், காடு மலைகளில் அவர் வாழ்வு முழுவதையும் அனுபவித்திருந்தால், முழு வாழ்வும் விழக்கோலமாய் இருந்திருக்கலாம்.
அந்த மகிழ்விலிருந்து கடவுள் அவரைப் பறித்து வந்து ஓர் அரண்மனையில் சிறைப்படுத்தி வைத்ததைப் போல் அல்லவா தாவீதின் வாழ்க்கை மாறிவிட்டது!... திரும்பிய இடமெல்லாம் துன்பம் அவரைத் துரத்தித் துரத்தி வந்ததே.
தாவீது தன் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகள், துயரங்களை மறக்கவில்லை. மறுக்கவும் இல்லை. அவைகளைப் பட்டும் படாமல் "சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்குகள், எதிரிகள்.." என்று இரு இடங்களில் மட்டும் குறிப்பிட்டு விட்டு, மீதிப் பாடல் முழுவதையும் பசும்புல் வெளி, அமைதியான நீர்நிலை, புத்துயிர், நீதி வழி, உமது கோல், நெடுங்கழி, விருந்து, நறுமணத்தைலம், நிரம்பி வழியும் பாத்திரம்... என்று நன்றி உணர்வால், மகிழ்வால் நிரப்பியுள்ளார். வாழ்வின் இறுதியில், தெளிவுகள் கிடைக்கும் என்று சொன்னோமே, அதுதான் இது. தாவீதுக்குக் கிடைத்தத் தெளிவு அவரை நன்றி உணர்வால் நிறைத்தது.

துயரக் கடலில் மூழ்கும் போது, யாருமே "கடவுளே" என்று அலறுவது வழக்கம். கடவுள் பக்தி இருந்தாலும், இல்லையெனினும், எப்பக்கமும் துயரங்கள் சூழ்ந்து பயமுறுத்தும் போது, மனித சக்திகளுக்கு மீறிய ஒரு சக்தியை எந்த மனித மனமும் தேடத்தான் செய்யும்.
ஆனால், மகிழ்வுக் கடலில் மிதந்து, மயங்கிக் கிடக்கும் மனதில் கடவுளைப் பற்றிய எண்ணங்கள் எழுவது அவ்வளவு இயல்பாக வராது. அந்த இயல்பு குழந்தைப் பருவம் முதல் வளர்க்கப்பட வேண்டும். எந்த ஒரு சின்ன உதவிக்கும் மற்றவருக்கு நன்றி சொல்லும் பழக்கத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள், கடவுளுக்கும் நன்றி சொல்லப் பழகலாம். தாவீது அப்படி பழக்கப்பட்டிருக்க வேண்டும். எனவேதான் இந்தத் திருப்பாடல் ஒரு நன்றிப் பாடலாக மலர்ந்துள்ளது.

நன்றி உணர்வுகளோடு, தாவீது தன் இளமைக் கால வாழ்வைக் குறித்த ஓர் ஏக்கத்தையும் இந்தத் திருப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். ஆயனாய் அவர் அனுபவித்த வாழ்வு அவ்வளவு இனித்ததால், கடவுளையும் ஓர் ஆயனாகக் கற்பனை செய்து பாடுகிறார்.
குழந்தைப் பருவத்தில் தன் மனதில் பதிந்த பசும்புல் வெளி, அமைதியான நீர்நிலை... என்ற தன் கனவுகளை மீண்டும் வாழ்கிறார் தாவீது. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, தாவீது தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டி வளர மறுக்கும் குழந்தையோ என நினைக்கத் தோன்றும். ஆனால், குழந்தைப் பருவத்தில் மகிழ்வையும், நிறைவையும் கண்டவர்கள் மீண்டும் அந்த நினைவுகளில் வாழ விரும்புவதில் தவறில்லையே.
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... என்று நாம் மனதில் அசைபோடும் நினைவுகளில் பல நம் வாழ்வை இதமாக்கும், வாழ்வுக்கு உரமூட்டும் நினைவுகள் தாமே.

வாழ்க்கையை நாம் ஒரு பயணம் என்று அடிக்கடி சொல்கிறோம். இந்தப் பயணம் செல்லும் வாகனம் தொடர்ந்து ஓட தேவையான எரிபொருளைத் தருவது மகிழ்வான நினைவுகள், குழந்தைப் பருவ நினைவுகள்.
ஏதோ ஓர் அதிர்ச்சியில் சுய நினைவை இழந்த எத்தனையோ பேர் குழந்தைப் பருவ நினைவுகளால் மீண்டும் குணம் பெற்ற செய்திகள் நமக்குத் தெரிந்தவைதாம். மேலோட்டமாகச் சிந்திக்கும் போது, குழந்தைப் பருவ நினைவுகள் குழந்தைத்தனமாகத் தெரிந்தாலும், இந்த நினைவுகள் பலரையும் குணப்படுத்தியுள்ளன. பலருக்கும் பல வழிகளில் வாழ்வைத் தந்துள்ளன.

குழந்தைப் பருவ நினைவுகளால் தன்னைப் பாதுக்காத்து வரும் ஒரு வீட்டுத் தலைவியை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மருத்துவ மனையில் சந்தித்தது இப்போது என் நினைவுக்கு வருகிறது. குடிப் பழக்கத்தால் குடும்ப அமைதியைக் குலைக்கும் கணவன், சரியாகப் படிக்காமல், தவறான நண்பர்களுடன் வாழ்வைத் தொலைத்து வரும் தன் மகன்... இப்படி ஒரு சூழலில், அந்தப் பெண்ணுக்கு Heart Attack வந்து அறுவைச் சிகிச்சை முடிந்து, மருத்துவமனையில் இருந்தபோது சந்திக்கச் சென்றேன். ஒவ்வொரு நாளும் தன் வீட்டில் வெடித்து வரும் பூகம்பங்கள், எரிமலைகள் பற்றி என்னிடம் கூறிய அவர், எத்தனையோ நாள் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியதாகவும் கூறினார். ஆனால், அந்த நேரங்களில் எல்லாம் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கண்டுபிடித்த ஒரு வழி... தன் குழந்தைப் பருவ நினைவுகளில் மூழ்கி விடுவது என்றார்.
அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஒரு தேயிலைத் தோட்டத்தில். மலைப் பகுதி, கண்ணுக்கெட்டிய தூரம் வரைப் பச்சைக் கம்பளம் விரித்தது போல் தேயிலைத் தோட்டம், அடிக்கடி மழைத் தூறல், அந்தத் தூறலில் நனைந்தது, அந்தத் தோட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடியது.. என்று குழந்தைப் பருவ நினைவுகள் பலவற்றை அவரது உள்ளம் தாங்கியிருந்தது எனக்குத் தெரிந்தது. அவைகளைப் பற்றி பேசும்போதே அவர் குணமாகி வருவதைப் போல் நான் உணர்ந்தேன். அவ்வளவு ஆனந்தத்துடன் அவைகள் பற்றி பேசினார்.
இறுதியில் அவர் சொன்ன வரிகள் என்னை மிகவும் ஆழமாகத் தொட்டன. "சாமி, வாழ்க்கையில் பல முறை நான் எல்லாத்தையும் இழந்தது போல் உணர்ந்திருக்கிறேன். என் கணவனின் அன்பு, மகனின் பாசம், குடும்ப அமைதி... இதோ, என் உடல் நலம்... இவை எல்லாவற்றையும் நான் இழந்தாலும் ஒன்றை மட்டும் நான் இழக்கவில்லை. என் குழந்தைப் பருவ நினைவுகள்... துன்ப வெள்ளத்தில் நான் மூழ்கும் போதெல்லாம், இந்த நினைவுகள்தாம் என்னைக் காப்பாற்றி கரை சேர்த்த தோணிகள்." என்றார்.
 நம்மில் பலருக்கு இது போல நம் குழந்தைப் பருவ அனுபவங்கள் கை கொடுத்துத் தூக்கியிருக்கும். தாவீதும் இதுபோல் உணர்ந்ததனால், தன் குழந்தைப்பருவ ஆனந்தத்தை, கனவுகளை எல்லாம் காத்து வந்த அந்தக் கடவுளையேத் தன்னைப் போன்ற ஓர் ஆயனாக உருவகித்து, "ஆண்டவர் என் ஆயர்" என்று ஆரம்பித்தார் தன் நன்றிப் பாடலை.







All the contents on this site are copyrighted ©.