2010-07-20 15:50:24

இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அடித்தளமிட்டவர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன


ஜூலை20,2010 இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அடித்தளமிட்ட அருள்தந்தை ஜாக்குமெ கொன்சால்வெஸ், முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் ஆகிய இருவரையும் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன

இலங்கையில் கத்தோலிக்க இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் அருள்தந்தை கொன்சால்வெஸ் இறந்ததன் 270ம் ஆண்டு நிறைவு, அந்நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபை பரவுவதற்குக் காரணமானவராக நோக்கப்படும் முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் பிறந்ததன் 300வது ஆண்டு நிறைவு ஆகிய கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

அருள்தந்தை ஜாக்குமெ கொன்சால்வெஸ், முதல்முறையாக சமய நூல்களைத் தமிழிலும் சிங்களத்திலும் எழுதியவர். இதனால் உள்ளூர் மக்கள் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்கவும் அதனைக் கற்கவும் முடிந்தது. மறைக்கல்வி ஏடு உட்பட சுமார் இருபது திருமறை நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இலங்கை டச்சு காலனியாக இருந்த சமயம் கால்வனிசம் அத்தீவின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தது. அச்சமயம் கத்தோலிக்கர் பரவலாக நசுக்கப்பட்டனர். அப்போது குருவாக இருந்த முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ், கத்தோலிக்கத் திருச்சபையை வலுப்படுத்தினார். 1651ம் ஆண்டு பிறந்த இவரை 1995ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுபெற்றவராக அறிவித்தார். சிலோனின் திருத்தூதர் என அழைக்கப்படும் இவர் பிறந்ததன் 300ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.