2010-07-19 15:41:46

பாகிஸ்தானில் கத்தோலிக்க கோவில் ஒன்று இஸ்லாம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது.


ஜூலை 19, 2010. தேவநிந்தனைக் குற்றம் புரிந்த கிறிஸ்தவர்கள் கொல்லப்படவேண்டும் எனக் கூச்சலிட்டு பாகிஸ்தானின் ஃபைசலாபாத் புறநகர்ப் பிரிவுக் கோவில் ஒன்று தாக்கப்பட்டது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அப்பங்குத்தள குரு பாஸ்கல் பவுலூஸ்.

இறைவாக்கினர் முகமதுவிற்கு எதிராக எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு பின்னர் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிற கிறிஸ்தவ சகோதரர்கள் இருவர் கொல்லப்படவேண்டும் என்ற கூச்சலுடன் வாரிஸ் பூரா புனித ஜெபமாலை அன்னை கோவிலை ஏறத்தாழ நூறு இஸ்லாமிய தீவிரவாதிகள் இணைந்து கல் வீசித் தாக்கியுள்ளனர்.

சட்டத்தைத் தங்கள் கையிலேயே எடுப்பதாக அறிவித்து தாக்குதல் நடத்திய இக்குழுவின் செயலால் அப்பகுதியின் ஒரு இலட்சம் கிறிஸ்தவர்களுள் பலர் வன்முறைக்குப் பயந்து இடம் மாறியுள்ளதாகக் கவலையை வெளியிட்டார் பங்கு குரு பவுலூஸ்.

ஃபைசலாபாத் ஆயர் ஜோசப் கூட்ஸ், அரசு அதிகாரிகளை விண்ணப்பித்ததைத் தொடர்ந்து போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு சுமுக நிலை திரும்பியுள்ள போதிலும், அமைதியையும் இணக்க வாழ்வையும் கொணரும் நோக்கில் சமூக மற்றும் மதப்பிரதிநிதிகளைக் கொண்ட அவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் குரு.








All the contents on this site are copyrighted ©.