2010-07-19 15:40:40

ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் மூலமே உலகில் ஏழ்மையை அகற்ற முடியும் என்கிறார் ஐரோப்பிய ஆயர் பேரவை அதிகாரி.


ஜூலை 19, 2010. உலகில் ஏழ்மையை அகற்றுவது என்பது தொழில்நுட்பங்களின் உதவியுடனோ, நிர்வாக நடவடிக்கைகளின் உதவியுடனோ மட்டும் வெற்றியடைய முடியாது, எழைகளையும் பங்குதாரர்களாக மாற்றும் ஒருமைப்பாட்டின் நடவடிக்கைகளையும் இணைப்பதன் மூலமே வெற்றி காண முடியும் என்றார் ஐரோப்பிய ஆயர் பேரவையின் அதிகாரி ஆயர் Adrianus van Luyn.

Brussels ல் இடம்பெற்ற பன்மதத் தலைவர்களின் கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய ஆயர், நம் முந்தைய தலைமுறைகளின் கனிகளை அனுபவித்து வரும் நாம், நம் மனித குல குடும்பத்திற்கான அன்பை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்றார். தட்ப வெப்ப நிலைகளில் மனிதனால் விளைந்த தீய பாதிப்புகளை அகற்றுவது மற்றும் அகதிகள் மீதான அக்கறை போன்றவைகளை ஐரோப்பியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் முன் வைத்த ஆயர், ஐரோப்பாவையும் தாண்டி ஏழை நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில், வளர்ச்சித் திட்டங்களுக்கான அக்கறை வெளிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அகதிகளுக்கென ஐரோப்பாவின் எல்லைகளைத் திறப்பதோ அல்லது மூடுவதோ அல்ல நம் முன் நிற்கும் கேள்வி, மாறாக எழைநாடுகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களைச் சொந்த காலில் நிற்க உதவுவதேயாகும் எனவும் விண்ணப்பித்தார் ஆயர் Adrianus van Luyn.








All the contents on this site are copyrighted ©.