2010-07-17 15:49:31

மனிதன் தண்ணீரைப் பெறுவது அவனின் அடிப்படை உரிமை


ஜூலை17,2010 மனிதன் தண்ணீரைப் பெறுவது அவனின் அடிப்படை உரிமை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் விவாதித்து வரும் வேளை, அதற்கு சில மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

மனிதன் தண்ணீரைப் பெறுவது அவனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தும் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு இம்மாதத்தில் இடம்பெறவுள்ளவேளை, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உலகில் ஏறத்தாழ 200 கோடிப்பேர் தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளிலும், குறைந்தது 300 கோடிப்பேர் தங்களது வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீர் கிடைக்காத சூழலிலும் வாழ்கின்றனர் என்று தண்ணீர் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கான முன்னாள் ஆலோசகர் Maude Barlow தெரிவித்தார்.

மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகத் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுமாறு ஐ.நா.வின் 192 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறிய பார்லோ, குடிதண்ணீர் பற்றாக்குறை, 2010ம் ஆண்டில் உலக அளவில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களில் மிகவும் பெரியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Stockholm சர்வதேச தண்ணீர் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏரிகள், பாசனக் கால்வாய்கள், பராமரிப்பில்லா கிணறுகள் போன்ற இடங்களிலிருந்து 88 கோடியே 40 இலட்சம் பேர் குடிநீரைப் பெறுகின்றனர்.

சுத்தமற்ற குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற இடங்களினால் ஊட்டச்சத்துக் குறைவான சிறாரில் 50 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள், வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வியாதிகளைப் பெறுகின்றனர். இவ்வியாதிகளால் ஆண்டுக்கு 18 இலட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு இறப்பவர்களில் 90 விழுக்காட்டினர் 5 வயதுக்குட்பட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்த சிறார் ஆவர் என்று அந்நிறுவனம் மேலும் கூறியது.








All the contents on this site are copyrighted ©.