2010-07-15 14:39:41

உலகக் கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றியைப் பெற்றுத் தந்த ஸ்பானிய வீரர் புனித யாகப்பரின் திருத்தலத்திற்கு திருப்பயணம் செல்லப்போவதாக வாக்களித்துள்ளார்


ஜூலை 15, 2010 உலகக் கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடி, கோல் அடித்து, வெற்றியைப் பெற்றுத் தந்த ஸ்பானிய வீரர் Andres Iniesta புனித யாகப்பரின் புனித பொருட்கள் வைக்கப்பட்டுள்ள Santiago de Compostelaவுக்கு திருப்பயணமாக நடந்தே செல்லப்போவதாக வாக்களித்துள்ளார்.
உலகக் கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற ஸ்பானிய வீரர்கள் ஒவ்வொருவரும் இப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மாதங்களுக்கு முன் தாங்கள் இந்தக் கோப்பையை வென்றால் நிறைவேற்றுவதாக எழுதிக் கொடுத்த வாக்குறுதிகளை Marca என்ற செய்தித்தாள் நிறுவனத்திற்கு முற்றிலும் ஒட்டப்பட்ட கடிதங்களில் அனுப்பியிருந்தனர்.
ஸ்பெயின் நாட்டுக் குழுவின் வெற்றியை அடுத்து, இந்தக் கடிதங்கள் திறக்கப்பட்ட போது, Andres Iniestaவுடன் வேறு இரு வீரர்களும் இந்த நடை பயணம் குறித்த வாக்குறுதிகள் அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தொலைகாட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் Andres Iniesta, எவ்வளவு கடினமாக இருந்தாலும், தான் இந்த நடை பயணத்தை நிச்சயம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறினார்.
இது நிறைவேறும் நேரத்தில், இந்த வீரர்களுடன் இன்னும் பல கால் பந்தாட்ட ரசிகர்களும் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ளக் கூடும் என்று செய்திகள் கூறுகின்றன.புனித யாகப்பர் திருநாளான, ஜூலை 25, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும்போது, அந்த ஆண்டு யகப்பரின் புனித ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை 25 ஞாயிற்றுக் கிழமை என்பதால், இவ்வாண்டு புனித ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, Santiago de Compostela வுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பயணம் மேற்கொள்ளும் முயற்சி நடைபெறும் என்பதும், இந்த ஆண்டு, திருத்தந்தை இந்தப் புனிதத் தலத்திற்கு செல்வார் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.