2010-07-14 16:50:19

ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்கள் அதிகமாகியிருப்பதால் புனித பூமிக்கு வரும் திருப்பயணிகள் எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றம்


ஜூலை 14, 2010. 2010ம் ஆண்டின் முதல் பாதியிலேயே புனித பூமிக்கு பத்து லட்சம் திருப்பயணிகள் வந்திருப்பது புனித பூமியில் அண்மைக் காலங்களில் காணப்பட்டிருக்கும் ஒரு பெரும் முன்னேற்றம் என்று புனித பூமியின் திருப்பயண பொறுப்பாளர் கூறியுள்ளார்.

இவ்வாண்டின் முதல் பாதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த கணக்கு, சென்ற ஆண்டு இதே நேரத்தில் எடுக்கப்பட்ட கணக்கைவிட 39 விழுக்காடு அதிகம் என்றும் ஜூன் மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 59 ஆயிரம் திருப்பயணிகள் புனித பூமிக்கு வந்துள்ளனர் என்றும் திருப்பயணங்களின் பொறுப்பாளரும், பிரன்சிஸ்கன் சபையைச் சார்ந்தவருமான அருள்தந்தை Pierbattista Pizzaballa கூறினார்.

ஆசிய நாடுகளிலிருந்து வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பது பற்றி தன் மகிழ்வை வெளியிட்டார் அருள் தந்தை Pizzaballa.

வேலையில்லா திண்டாட்டத்தாலும், வறுமையாலும் வாடும் புனித பூமி மக்களுக்கு திருப்பயணிகளின் வருகை பெரும் உதவியாக இருக்கும் என்றும், இங்கு வரும் திருப்பயணிகளில் பலர் புனிதத் தலங்களைத் தரிசிப்பதோடு மட்டும் நில்லாமல், இங்குள்ள மக்களின் வாழ்வையும் கவனமாய்ப் பார்ப்பது, இங்கு வாழும் ஏழைகளுக்குப் பெரும் உதவியாக இருக்கிறதென்றும் அருள்தந்தை Pizzaballa கூறினார்.

திருத்தந்தை புனித பூமிக்கு வந்தது, தலத் திருச்சபை ஆயர் பேரவையின் முயற்சிகள், அண்மைக் காலத்தில் புனித பூமியில் வெகுவாய்க் குறைந்துள்ள தாக்குதல்கள் ஆகியவை திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமானதற்கு முக்கியமான காரணங்கள் என்று புனித பூமியின் திருப்பயண பொறுப்பாளர் அருள்தந்தை Pierbattista Pizzaballa கூறினார்.








All the contents on this site are copyrighted ©.