2010-07-14 16:56:10

HIV நோயைக் கட்டுப்படுத்த புதிய முறை வழியாக, அனைவரும் பயன் பெற முடியும் - ஐ.நா. அறிக்கை


ஜூலை 14, 2010. HIV நோயைக் கட்டுப்படுத்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒர் எளிய முறை வழியாக, அனைவரும் பயன் பெற முடியும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

அடிப்படையில் மிக எளிதாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ முறையால் இந்த நோய் கண்டுள்ள ஒரு கோடி மக்களின் உயிரை 2025ம் ஆண்டுக்குள் காக்க முடியும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும் என்றும் HIV/AIDSகென ஐ.நா.வில் இயங்கி வரும் UNAIDS என்ற அங்கம் இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

2008ம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி, உலகில் 3 கோடியே 34 லட்சம் பேர் HIV நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 27 லட்சம் பேர் இந்த நோயினால் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறும் இந்த நிறுவனம், உலகில் இந்த நோய் கண்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே இந்த நோய்க்கான மருத்துவ உதவிகள் பெறுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

எத்தியோப்பியா, கென்யா, சாம்பியா என ஆப்ரிக்காவின் ஏழு நாடுகளில் அண்மையில் சேகரிக்கப்பட்டத் தகவல்களின் படி, இளையோரிடையே இந்த நோய்க்கான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், அவர்கள் மத்தியில் பாலியல் உறவு பழக்கங்கள் மாறியுள்ளதாகவும், அந்த வயதினரிடையே HIV நோயுற்றோரின் எண்ணிக்கைக் குறைந்து வருவதாகவும் இவ்வறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.