2010-07-13 16:30:41

விவிலியத் தேடல்:


RealAudioMP3
துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியை விட, அந்தத் துன்பங்களில் இறைவனின் துணை உண்டு, வழி நடத்துதல் உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 தருகிறது; எனவேதான், இந்தத் திருப்பாடல் விவிலியத்தின் வேறு பல பகுதிகளை விட நம் மனங்களில் ஆழமாய் இடம் பிடித்துள்ளது என சென்ற வாரம் சிந்தித்தோம்.
இந்தச் சிந்தனையை வானொலியில் கேட்டு, அல்லது, இணையதளத்தில் வாசித்து மூன்று பேர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஒருவர் குரு. மற்ற இருவரும் குடும்பத் தலைவிகள்.
தன் நாட்டில் நடக்கும் தீராத பிரச்சனைகளால் வேறொரு நாட்டில் குடியேறி பணிபுரிந்து வரும் குரு, இந்தத் திருப்பாடலின் மையக் கருத்தால் தன் நாட்டுப் பிரச்சனைகள் குறித்து ஒரளவு தெளிவு பெற்றதாகக் கூறினார். குடும்பத் தலைவியர் இருவரும் பல பிரச்சனைகளால், அதிலும் முக்கியமாக, அண்மைக் காலங்களில் அவர்களை வதைக்கும் உடல்நலக் குறைவால் மனம் தளர்ந்திருந்ததாகவும், அந்த வேளையில் அவர்களை வந்து சேர்ந்த இந்தத் திருப்பாடலின் மையக் கருத்து, பிரச்சனைகளைச் சந்திக்க அவர்களுக்குப் புதிய சக்தியைத் தந்துள்ளதாகவும் சொன்னார்கள்.
அன்புள்ளங்களே, திருப்பாடல் 23ன் கருத்துக்கள் இவ்வாறு பலரையும் ஆழ் மனதில் தொட வேண்டும், நலன்களைத் தர வேண்டும் என்பதே இந்தத் தேடலின் முக்கிய நோக்கம். தொடரட்டும் நமது தேடல்.
புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். புயலுக்கு முன் நிலவும் அமைதி... என்ன நடக்குமோ என்ற பயத்தில் வாயடைத்து நிற்கும் அமைதி. புயலுக்குப் பின் வரும் அமைதி... நடந்து முடிந்த அழிவுகளைப் பார்த்து வாயடைத்து நிற்கும் அமைதி. இப்படி, புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி ஏற்படும். புயலுக்குள் அமைதி இருக்குமா? இருக்கும். புயலின் கண் - "the eye of a storm" என்று சொல்லப்படும் இந்தப் பகுதி புயலின் மையத்தில் இருக்கும் அமைதியான பகுதி.
தனிப்பட்ட வாழ்வில் நம்மைச் சுழற்றி அடிக்கும் பல புயல்களின் நடுவிலும் இப்படி ஓர் அமைதியை நாம் காண வாய்ப்புண்டு. கடல் நடுவே, அலைகளும் புயலும் சீடர்கள் வாழ்வை பயமுறுத்திய போது, அதே படகில் நிம்மதியாய் உறங்கிய இயேசுவை நமக்கு நினைவிருக்கும். வாழ்வில் ஏற்படும் துன்பம், போராட்டம் என்ற புயல்கள், சூறாவளிகள் நடுவில் கடவுள் இருக்கத்தான் செய்கிறார். பயத்தில் நாம் எழுப்பும் அலறல்களுக்கு அவர் இருவிதங்களில் பதில் சொல்லக்கூடும். ஒன்று வீசுகின்ற புயலை அமைதிப்படுத்துவார். அல்லது, அந்தப் புயலைக் கண்டு மிரண்டு அலறும் நம் மனதை அமைதிப் படுத்துவார். புயலுக்கு நடுவிலும் அமைதியைத் தர வல்லவர் இறைவன்.
இயற்கையில் வீசும் புயலைக் கட்டுப்படுத்துவதோ, புயலை நிறுத்துவதோ நம் கையில் இல்லை. புயல் வீசத்தான் செய்யும். ஆனால், அந்தப் புயல் நேரத்தில் நம் மனதை, எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது நம் கையில் உள்ளது. பல நேரங்களில் வாழ்வில் வீசும் புயல்ககளைத் தடுப்பதோ, மாற்றுவதோ நமது சக்திக்கு மீறியதாகத் தெரியலாம். ஆனால், இந்தப் புயல்களால் நம் மனதில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதோ, மாற்றுவதோ கட்டாயம் நம் சக்திக்கு உட்பட்டது.

முன்பு ஒரு முறை கேட்ட கதை இது: ஒரு ஊரில் இரு பெட்டிக் கடைகள் இருந்தன. முதல் பெட்டிக் கடைக்காரர் சரியான 'சிடுமூஞ்சி'. வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுவது, அவர்களை வசைபாடுவது இவருக்கு வழக்கம். மற்றொரு பெட்டிக் கடைக்காரர் அனைவரையும் புன்முறுவலுடன் வரவேற்று, வியாபாரம் செய்வார்.
ஊரில் இருந்த ஒரு பெரியவர் தினமும் அந்த 'சிடுமூஞ்சி'க்காரரிடமே பொருட்களை வாங்கச் சென்றார். அதைக் கண்ட அவரது நண்பர், "ஏன் இந்தக் கடைக்காரரின் எரிச்சலையும், வசைகளையும் தினமும் பெறுகிறீர்? சிரித்து வரவேற்கும் அந்தக் கடைக்காரரிடம் செல்லலாமே." என்றார். அதற்கு அந்தப் பெரியவர், "எப்போதும் கோபமாய் இருப்பது அவரது பிரச்சனை. அவர் எடுத்த முடிவு. அவர் கோபப்படுகிறார் என்பதற்காக, இந்தக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற என் முடிவை நான் ஏன் மாற்ற வேண்டும்?" என்று கேட்டார். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டுள்ள ஒரு கருத்துதான். ஆனால், ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.
வாழ்க்கையின் பல பிரச்சனைகளில், எல்லாக் கணக்கையும் கூட்டி, கழித்து, வகுத்து, பெருக்கிப் பார்த்தால், இறுதியில் அந்தப் பிரச்சனைகளால் நாம் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறோம் என்பது நம் கையில் உள்ளது. பிரச்சனைகளால் நாம் நொறுங்கிப் போவதோ, உறுதிப் படுவதோ நம் மனதில், நம் எண்ணங்களில்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
முன்பு ஒரு முறை வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியில் நான் சொன்ன ஓர் உவமையை மீண்டும் நினைவு படுத்துகிறேன். விழுகின்ற அடி ஒன்று தான். ஆனால், அந்த அடியால் கண்ணாடி நொறுங்கி விடும், அதே அடியால் பஞ்சு மிருதுவாகும், தோல் பதப்படும். அடி ஒன்று தான். விளைவுகள் வேறு.
வாழ்க்கையில் விழும் அடிகளில் கடவுளும் நம்மோடு அந்த அடிகளைத் தாங்கிக் கொள்கிறார், சில சமயங்களில் நமக்குப் பதில் அடிகளைத் தாங்கிக் கொள்கிறார் அல்லது, அடிகளைத் தாங்க உறுதி தருகிறார், என்பதுதான் திருப்பாடல் 23ல் கூறப்பட்டுள்ள உண்மை. இதே உண்மையைத் தான் எசாயாவும் வேறொரு விதமாகக் கூறியுள்ளார்.

எசா. 53: 4-5
மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். 
ஏறத்தாழ உலகின் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தத் திருப்பாடல், அதன் மூல மொழியான எபிரேயத்தில், 57 வார்த்தைகளில், வாழ்க்கையின் நடைமுறைக்கு ஏற்ற ஓர் இறையியலைப் போதிக்கிறது. நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையை விட, கடவுள் இந்த உலகைப் பார்க்கும் பார்வை பெரிதும் வேறுபட்டிருக்கும். ஆனாலும், முடிந்த வரை கடவுளின் அந்தப் பார்வையை நாம் பெற முடியும் என்பதை நமக்கு இந்தத் திருப்பாடல் உணர்த்துகிறது.

இந்தப் பாடலை எழுதியவர் தாவீது என்பது நாம் பரவலாகக் கூறும் ஒரு கருத்து. இதை எழுதிய பாடலாசிரியர் தன் வாழ்வை ஒரு பயணமாய்ச் சித்தரித்திருப்பதைப் பார்க்கலாம்.
அழகாக, அமைதியாக, பசும்புல் வெளிக்கு நடுவே சலசலவென்று ஓடிக் கொண்டிருக்கும் சிற்றோடையைப் போல் பாடலாசிரியரின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது. இந்தப் பயணத்தில் ஒரு திடீர் திருப்பம். வாழ்க்கைப் பயணம் தடம் புரண்டு, தாறுமாறாய் ஓடியது. என்ன காரணம்? உடல் நோயா, எதிரிகளின் சூழ்ச்சியா, நெருங்கிய ஒருவரின் மரணமா? காரணம் சரிவரத் தெரியவில்லை. ஆனால், பாடலாசிரியரின் வாழ்க்கை நிலை குலைந்தது. துன்பங்கள் மலைபோல் எழுந்து அவரை அமுக்கி, இருளில் தள்ளி விட்டது. அந்த இருளுக்குள் புதைக்கப்பட்ட பாடலாசிரியர் சன்னமாய்க் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கேட்டு, அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. என்ன அதிசயம் அது?
இறந்து போன அவரது உயிர் நண்பர் மீண்டும் உயிர் பெற்று வந்தாரா? அவர் இழந்த செல்வங்கள் எல்லாம் மீண்டும் கிடைத்துவிட்டனவா? அவரது உடல் முற்றிலும் குணமாகி விட்டதா? அதிசயம் இவையல்ல.
இழந்தவைகளை, குறைந்தவைகளை மீண்டும் பெறுவதைக் காட்டிலும், அந்த இழப்புகள் நிறைந்த வாழ்க்கையும் வாழ்வதற்கு உகந்ததுதான் என்ற நம்பிக்கை, உறுதி, மனநிலை உருவானதுதான் அந்த அதிசயம்.
ஏதோ ஒரு திரையை விலக்கி, திடீரென தன்னை ஒளி வெள்ளத்தில் கடவுள் மூழ்க வைத்தார் என்று சொல்லவில்லை பாடலாசிரியர். மாறாக, தன்னை இருள் சூழ்ந்தபோது, தான் தடுமாறியபோது அந்த இருளில் தனது கரம் பிடித்து வழி நடத்தினார் என்று சொல்கிறார் திருப்பாடல் 23ன் ஆசிரியர்.
கடவுளின் கரம் பிடித்து அவர் அந்த இருள் வழி நடந்த போது, திரும்பிப் பார்த்தார். அவரது இறந்த காலம் எந்த வகையிலும் மாறவில்லை. அதே இருள், அதே இழப்பு, அதே துயரம்... ஆனால், நிகழ் காலத்தில், அல்லது எதிர் காலத்தை நோக்கி இறைவனோடு எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித் தந்தது. வாழ்க்கைப் பாதை கரடு முரடானது தான். ஆனாலும், கடவுளோடு நடந்து செல்வதால், பயணம் நன்றாகவே இருக்கும் என்பதுதான் அந்தப் பாடம். கடவுளை, உலகை, வாழ்வை, தன்னைப் பற்றிய இந்த முக்கிய பாடத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவே இந்தத் திருப்பாடலை எழுதினார் ஆசிரியர்.
 இந்தத் திருப்பாடலை மீண்டும், மீண்டும் படிக்கும்போது, நம்மைப் பற்றி, நம் வாழ்வைப் பற்றி, இந்த உலகைப் பற்றி, கடவுளைப் பற்றி நம் எண்ணங்கள் இன்னும் தெளிவடைய, ஆழப்பட வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். அந்த நம்பிக்கையோடு நம் தேடலைத் தொடர்வோம்.







All the contents on this site are copyrighted ©.