2010-07-12 15:49:38

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது காட்டப்படும் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது - பாகிஸ்தான் சிறுபான்மையினர் அமைப்பு


ஜூலை 12, 2010 'முஸ்லிம்கள் மட்டும்' என்ற எண்ணத்தின் அடிப்படையில் இயங்கும் பாகிஸ்தானில், சிறுபான்மையினர் மீது காட்டப்படும் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாகவும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளிலிருந்து பல வழிகளிலும் தடுக்கப் படுகின்றனர் என்றும் பாகிஸ்தான் சிறுபான்மையினர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பாகுபாட்டை உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் அரசு நடத்தும் நிறுவனங்களில் அதிகம் காணப்படுகிறது என்றும், அரசு நடத்தும் கல்விக் கூடங்களில் ஆசிரியர், மாணவர்கள் அனைவரும் இவ்வகை பாகுபாட்டுடன் நடந்து கொள்கின்றனர் என்றும் இவ்வமைப்பு கூறியது.

கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் உட்பட பல சிறுபான்மை மாணவர்களின் உரிமைகளைப் பாகிஸ்தான் கல்வி அமைச்சர் மீறி வருகிறார் என்று சுட்டிக்காட்டிய இவ்வமைப்பு, அமைச்சரின் செயல்பாடுகளைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதித் துறைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

13 வயது நிரம்பிய தனது பேரன் பள்ளியில் குரானின் வரிகளைச் சொல்வதற்குக் கட்டாயபடுத்தப்பட்டான் என்று புகார் கூறிய Nadia Iftikhar என்ற கிறிஸ்தவப் போதகரின் இல்லம் தாக்கப்பட்டது, பள்ளிகளில் கிறிஸ்துவர்கள் என்ற ஒரே காரணத்தால் ஆசிரியர்களால் தண்டிக்கப்படுவது, நாட்டின் சட்டங்களுக்கு எதிராக, பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான நாடு என்று பள்ளிப் புத்தகங்களில் பாடங்கள் சொல்லித்தரப்படுவது என்று பல குறைகளையும் பாகிஸ்தான் சிறுபான்மையினர் அமைப்பு நீதித் துறையிடம் சுட்டிக் காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.