2010-07-12 15:47:41

கோடை விடுமுறை இல்லம் Castel Gandolfoல், திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை


ஜூலை 12, 2010 விடுமுறை நாட்கள் உடல், மனம், ஆன்மா அனைத்துக்கும் புத்துணர்ச்சியைத் தரும் வண்ணம் அமைய வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

ஐரோப்பாவின் பாதுகாவலரான புனித பெனடிக்ட்டின் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று, திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoல், தன் விடுமுறையைச் செலவிட்டு வரும் திருத்தந்தை, அங்கு தனது முதல் மூவேளை செப உரையை வழங்கிய போது, இவ்வாறு கூறினார்.

இந்த ஞாயிறுத் திருப்பலிக்கான நல்ல சமாரியர் உவமையைப் பற்றி பேசியத் திருத்தந்தை, தேவையில் உள்ள எவரும் நமது அயலவர் என்றும், அன்பின் அடிப்படையில் கிறிஸ்து எழுப்பிய எண்ணங்களே நமது வாழ்வின் அடித்தளமாக அமைய வேண்டும் என்றும் கூறினார்.

Lazio கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோடை விடுமுறை இல்லத்திற்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ள திருத்தந்தை, அந்தப் பகுதியிலிருந்து இந்த மூவேளை செபத்திற்கென வருகை தந்திருந்த மக்களையும், இன்னும் பிற திருப்பயணிகளையும் வாழ்த்தினார்.

மூவேளை செப உரையின் இறுதியில், மேலை நாடுகளில் நிறுவப்பட்டிருந்த துறவுமடங்களுக்கான நெறிமுறைகளை வகுத்தவரும், தன் பாப்பிறை பணிக்கான பாதுகாவலருமான புனித பெனடிக்ட்டை, திருத்தந்தை ஆறாம் பவுல் ஐரோப்பாவின் பாதுகாவலாராக உயர்த்தியதை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நினைவு கூர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.