2010-07-10 16:12:26

கியூபாவின் அண்மை செயல்பாடுகள் நம்பிக்கைகளை விதைப்பவைகளாக உள்ளன என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்.


ஜூலை 10, 2010. கியூபாவின் 50க்கும் மேற்பட்ட அரசியல் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு கம்யூனிச பத்திரிகையில் வந்துள்ள செய்தி, கடந்த சில வாரங்களாக ஆவலோடுக் காத்திருந்த நல்லதொரு செய்தி என்றார் திருப்பீடப்பேச்சாளர் குரு Federico Lombardi.

அரசியல் கைதிகளின் விடுதலையும் பத்திரிகையாளர் Guillermo Farinas ன் உண்ணாவிரதப் போராட்ட கைவிடலும் ஓர் அரசியல் மற்றும் சமூக ஒன்றிணைந்த வாழ்வுக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளதாகக் கூறினார் இயேசு சபை குரு Lombardi.

கியூப கர்தினால் ஒர்த்தேகா அலாமினோ மற்றும் ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் டயோனிசியோ கார்சியா ஆகியோர் அரசுத்தலைவருடன் நடத்தியப் பேச்சுவார்த்தைகளின் வழி கிட்டியுள்ள இக்கனி, மக்கள் நலனில் தலத்திருச்சபை எவ்வளவு ஆழமான அக்கறை கொண்டுள்ளது என்பதன் வெளிப்பாடாய் உள்ளது என மேலும் கூறினார் திருப்பீடப் பேச்சாளர்.

கியூப மக்களின் துன்பங்களை உணர்ந்துள்ள திருச்சபை, எப்போதும் அந்நாட்டிற்கு எதிரான பொருளாதாரத்தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் இயேசு சபை குரு Lombardi.








All the contents on this site are copyrighted ©.