2010-07-08 15:36:57

கால் பந்து உலகக் கோப்பை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்ததும், தென் ஆப்ரிக்காவில் இன மோதல்கள் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க திருச்சபை அதிகாரிகள் முயற்சி


ஜூலை 08, 2010 கால் பந்து உலகக் கோப்பை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்ததும், தென் ஆப்ரிக்காவிற்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர் பலர் தாக்கப்படுவர் என்றும், இன மோதல்கள் உருவாகும் ஆபத்து அதிகம் உள்ளதென்றும் மனித உரிமை அமைப்புகள் கூறிவரும் இவ்வேளையில், அப்படி ஒரு ஆபத்து ஏற்படாத வண்ணம் திருச்சபை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முயற்சிகளின் ஒரு அங்கமாக, தென்னாப்ரிக்க பேரவையின் தலைவரும், Johannesburg உயர் மறைமாவட்ட பேராயருமான Buti Tlhagale தென்னாப்ரிக்க அரசுத் தலைவர் Jacob Zumaவைச் சந்தித்து, ஆயர் பேரவையின் கவலைகளைத் தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் நாள் நடந்த இந்த சந்திப்பில், பேராயருடன் பல்வேறு சமயத் தலைவர்களும் அரசுத் தலைவரைச் சந்தித்து அமைதி முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.உலகக் கோப்பை ஆரம்பிக்கப்பட்ட அதே நேரத்தில், கத்தோலிக்கத் திருச்சபை சமாதானக் கோப்பை என்ற இணையான கால்பந்து போட்டிகளை ஆரம்பித்ததைச் சுட்டிக் காட்டிய தென்னாப்ரிக்க ஆயர் பேரவையின் சமூக நீதி ஆணையத்தின் உறுப்பினரான அருள்தந்தை Mike Deeb, உலக அளவில் நடைபெறும் விளையாட்டு முயற்சிகள் ஒற்றுமையை வளர்க்கும் கருவிகளாக விளங்குவதையே உலகம் விரும்புகிறதென்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.