2010-07-08 15:39:04

உலக நாடுகளில் கல்விக்கென ஒதுக்கப்படும் நிதி உதவி பெருமளவு குறைந்து வருவது எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும் - UNESCO நிறுவனம் எச்சரிக்கை


ஜூலை 08, 2010 கால் பந்து உலகக் கோப்பைக்கான இறுதி ஆட்டம் நிகழும் ஞாயிறன்று தென் ஆப்ரிக்காவின் Pretoriaவில் உலகக் கோப்பை கல்வி உச்சி மாநாடு ஒன்று நடக்க விருக்கின்றது. ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டையொட்டி, ஆப்ரிக்கக் குழந்தைகளின் கல்வித் தரம் குறித்து UNESCO நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை இப்புதனன்று வெயிட்டுள்ளது.
‘1 Goal’ அதாவது, ‘ஒரு முடிவு’ என்ற மையக் கருத்தில் கூடும் இந்த உச்சிமாநாடு, உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுக் கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய பங்காக இருக்கும் என்று தென்னாப்ரிக்க அரசுத் தலைவர் Jacob Zuma கூறியுள்ளார்.
உலக நாடுகளில் கல்விக்கென ஒதுக்கப்படும் நிதி உதவி பெருமளவு குறைந்து வருவது எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும், அதிலும் சிறப்பாக, வறுமைக்கெதிராக போராடி வரும் அப்ப்ரிக்க நாடுகளை அதிகம் பாதிக்கும் என்று ஐ.நா.வின் UNESCO நிறுவனம் இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஆப்ரிக்காவில் தற்போது பின்பற்றப்படும் கல்வித் தரம், கல்வி முறைகள் இன்னும் தொடரப்பட்டால், 2015ம் ஆண்டிற்குள் ஆப்ரிக்காவின் சகாராப் பகுதிகளில் 3 கோடியே, 20 லட்சம் குழந்தைகள் படிக்கும் வசதியின்றி இருப்பார்கள் என்று இவ்வறிக்கை கூறுகிறது.உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தியதால் ஆப்ரிக்காவின் சக்தியும், திறமையும் உலகிற்குத் தெரிய வந்துள்ளது போல், வளரும் தலைமுறைக்குரிய நடவடிக்கைகளை எடுப்பதிலும் ஆப்ரிக்க நாடுகள் தங்கள் திறமையை உலகிற்குத் தெளிவுபடுத்த வேண்டுமென UNESCOவின் தலைமை இயக்குனர் Irina Bokova இப்புதனன்று இவ்வறிக்கையை வெளியிடும் போது கூறினார்.







All the contents on this site are copyrighted ©.