2010-07-07 15:55:10

அன்னை தெரசாவின் நூறாவது பிறந்த நாளன்று கத்தோலிக்கர்கள் நியூ யார்க் நகரின் Empire State கட்டடத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்


ஜூலை 07, 2010 அன்னை தெரசாவின் நூறாவது பிறந்த நாளான ஆகஸ்ட் மாதம் 26 அன்று கத்தோலிக்கர்கள் நியூ யார்க் நகரின் Empire State கட்டடத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
இந்த நூற்றாண்டை ஓட்டி, அந்த அடுக்கு மாடி கட்டடத்தின் ஒளி விளக்குகளை அன்னை தெரசாவின் அடையாளங்களான நீலம், வெள்ளை என்று மாற்றச் சொல்லி, மத உரிமைகளுக்கான கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரான Bill Donohue கேட்டுக் கொண்ட போது, அக்கட்டடத்தின் உரிமையாளரான Anthony Malkin அதை மறுத்துவிட்டதால், இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளதென செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புனித பேட்ரிக் நாள் என வருடத்தின் பல முக்கிய நாட்களில் Empire State கட்டடத்தின் முன் உள்ள விளக்குகளின் நிறங்கள் மாற்றப்படுவது வழக்கம். அதேபோல், சீனக் குடியரசின் 60ம் ஆண்டு நிறைவு போன்ற ஒரு சில சிறப்பு நினைவு நாட்களிலும் இந்த ஒளி விளக்குகள் மாற்றப்படுவது வழக்கம். எனவே, அன்னை தெரசாவின் 100வது பிறந்த நாளுக்கும் இது மாற்றப்பட வேண்டுமென்பது நியாயமான கோரிக்கையே என்று Bill Donohue கூறினார்.
இந்த நூற்றாண்டு நினைவாக அமெரிக்க அஞ்சல் துறையினர் ஒரு சிறப்பு வில்லையை வெளியிடத் தீர்மானித்திருக்கும் போது, இந்தக் கட்டடத்தின் விளக்குகளை மாற்ற அக்கட்டடத்தின் உரிமையாளர் மறுத்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறதென Bill Donohue மேலும் கூறினார்.இந்தப் போராட்ட முயற்சியில் கலந்து கொள்வதாக 6000 பேருக்கு மேல் இதுவரைக் கையொப்பமிட்டுள்ளதாகவும், இது குறித்து இந்திய ஆயர் பேரவைக்கும் தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும் Bill Donohue செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.