2010-07-05 15:40:52

மௌன நேரங்கள் நவீன மனிதனுக்குத் தேவை என்கிறார் பாப்பிறை.


ஜூலை 05, 2010. நவீன மனிதனுக்கு மௌனம் என்பது அச்சம் தரும் ஒன்றாக இருக்கின்ற போதிலும் உள்மன மற்றும் வெளிப்புற மௌனம் என்பது இறைகுரலுக்கும் நம் அயலாரின் குரலுக்கும் செவிமடுக்க உதவுவதாக உள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கடந்த ஆண்டின் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இத்தாலியின் சுல்மோனா பகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்ட திறந்தவெளி திருப்பலியில் இவ்வாறு கூறி மறையுரையாற்றிய திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தை 5ம் செலஸ்டீனின் 800வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை 5ம் செலஸ்டீனின் வாழ்வு புனிதம் நிறைந்ததாய் இருந்தது என்ற பாப்பிறை, புனிதம் என்பது ஒரு நாளும் தன் வசீகர சக்தியை இழப்பதில்லை, மறக்கப்படுவதில்லை மாறாக மேலும் மேலும் பிரகாசமுடன் இறைவனுக்கான மனிதனின் தேடலை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார்.

5ம் செலஸ்டீனின் வாழ்வில் காணப்படும் முக்கியப் படிப்பினைகள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அதில் முதன்மையானதாக மௌனம் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.

இறைவனின் குரலுக்குச் செவிமடுப்பதற்காகவே இவ்வுலகிலிருந்து ஒதுங்கி துறவு வாழ்வைத் தேர்ந்துகொண்ட திருத்தந்தை 5ம் செலஸ்டீன் மௌனத்தை தன் தினசரி வாழ்வின் முக்கியக் கூறாக மாற்றி இறை குரலுக்கு செவி மடுப்பதில் வெற்றியும் கண்டார் என்றார் திருத்தந்தை.

திருத்தந்தை 5ம் செலஸ்டீனின் கல்லறை இப்பகுதியிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.