2010-07-03 15:31:49

திருத்தந்தையின் சுல்மோனாவுக்கான ஒருநாள் திருப்பயணம்


ஜூலை03,2010 இஞ்ஞாயிறன்று இத்தாலியின் சுல்மோனா நகருக்கு ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஞாயிறு காலை வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் செல்லும் திருத்தந்தையின் இந்த ஒரு நாள் பயணத் திட்டத்தில் சுல்மோனா நகரின் கரிபால்டி வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துதல், நோயாளி மற்றும் வயதான குருக்களுக்கானப் புதிய இல்லத்தை ஆசீர்வதித்து அதைத் திறந்து வைத்தல், அந்நகர் இளையோரைச் சந்தித்தல், புனிதர்கள் பான்பிலோ, செலஸ்டின் ஆகியோரின் திருப்பண்டங்கள் இருக்கும் சிற்றாலயம் செல்லுதல் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் லாக்குய்லாவிலுள்ள கொல்லெமாஜ்ஜோ புனித மரியா பேராலயம் அழிந்தது. ஆயினும் அப்பேராலயத்தில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 13ம் நூற்றாண்டு திருத்தந்தையான ஐந்தாம் செலஸ்டின் அதாவது புனித செலஸ்டினின் உடல் சிதைவுறவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரலில் அங்கு சென்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புனிதரின் உடல்மீது பால்யம் எனப்படும் தனது கழுத்துப்பட்டையை வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தப் புனிதரின் உடல் சுல்மோனா பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புனிதர் பிறந்ததன் 800வது ஆண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டில், புனித செலஸ்டின் ஆண்டு எனவும் அறிவித்தார் திருத்தந்தை.

இந்த ஆண்டின் ஒரு கட்டமாக திருத்தந்தையின் இஞ்ஞாயிறு திருப்பயணம் இடம் பெறுகிறது.

7ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஆயரான புனித பான்பிலோவின் புனிதப் பொருட்களும் சுல்மோனா பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.