2010-07-03 15:33:09

சுற்றுலா, உயிரியல் பன்மைத்தன்மையைப் பாதுகாப்பதற்குத் தனக்கு இருக்கும் பொறுப்பிலிருந்து ஒதுங்கி இருக்க முடியாது – உலக சுற்றுலா தினம் (செப்டம்பர் 27)


ஜூலை03,2010 உயிரியல் பன்மைத்தன்மையைப் பாதுகாப்பதற்குத் தனக்கு இருக்கும் பொறுப்பிலிருந்து சுற்றுலா ஒதுங்கி இருக்க முடியாது என்று திருப்பீட குடியேற்றதாரர்க்கான அவை கூறியது.

வருகிற செப்டம்பர் 27ம் தேதி கடைபிடிக்கப்படவிருக்கும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, “சுற்றுலாவும் உயிரியல் பன்மைத்தன்மையும்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட திருப்பீட குடியேற்றதாரர்க்கான அவை இவ்வாறு கூறியது.

இவ்வாண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடைபிடித்து வரும் சர்வதேச உயிரியல் பன்மைத்தன்மை ஆண்டிற்குத் தனது பங்கை அளிக்கும் விதமாகத் திருப்பீடம் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகில் 22 விழுக்காட்டு பாலூட்டிகளும், 31 விழுக்காட்டு நிலநீர் வாழ் உயிரினங்களும், 13.6 விழுக்காட்டுப் பறவை இனங்களும், 27 விழுக்காட்டு கடல் நீரடிப்பாறைகளும் அழியக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன என்றுரைத்த அண்மை ஆய்வுகளையும் அச்செய்தி சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த அழிவுகளுக்கு எண்ணற்ற மனிதச் செயல்கள் காரணமாக இருக்கின்றன, அவற்றில் சுற்றுலாவும் ஒன்று எனவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

1995ல் 53 கோடியே 40 இலட்சமாகவும், இரண்டாயிரமாம் ஆண்டில் 68 கோடியே 20 இலட்சமாகவும் இருந்த உலகச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இந்த 2010 ல் நூறு கோடியே அறுபது இலட்சமாகவும், 2020ல் 1,56 கோடியே 10 இலட்சமாகவும் உயரக்கூடும் என்று சர்வதேச சுற்றுலா அமைப்பு வெளியிட்ட கணிப்பையும் திருப்பீட குடியேற்றதாரர்க்கான அவை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அரசுகள் தெளிவான சட்டங்களை வகுத்து பல்வேறு உயிரினங்களைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அத்திருப்பீட அவை வலியுறுத்தியுள்ளது.

இச்செய்தியில் திருப்பீட குடியேற்றதாரர்க்கான அவைத் தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வெலியோ, செயலர் பேராயர் அகுஸ்தினோ மர்க்கெத்தோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.