2010-07-01 15:18:50

திருப்பீடச்செயலர் கர்தினால் பெர்த்தோனேக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


ஜூலை 01, 2010 திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே குருவானதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, "இறைகுடும்பத்திற்கான அருகாமை உதவி" என்ற புகழாரத்துடன் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
தினந்தோறும் திருத்தந்தையுடன் இணைந்து சேவையாற்றும் கர்தினால் பெர்த்தோனேயின் கடந்த கால அர்ப்பணச் சேவைகளைப் பாராட்டியுள்ள பாப்பிறை, ஆயர் அல்பினொ மென்சாவினால் 1960ம் ஆண்டு ஜூலை முதல் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டது, மற்றும் சலேசிய சபை குருவாக இளையோரிடையே கல்விப்பணிக்கென தன்னை அர்ப்பணித்தது ஆகியவை பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
1991ம் வருடம் இத்தாலியின் வெர்செல்லி பேராயராக நியமனம் பெற்றது, பின் 1995ம் ஆண்டு முதல் விசுவாசக்கோட்பாடுகளுக்கான பேராயத்தில் தன் கீழ் அப்பேராய செயலராக பணியாற்றியது, 2002ல் ஜெனோவா பேராயராகவும் 2003ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டது, தற்போது 2006 முதல் திருப்பீடச்செயலராகப் பொறுப்பேற்று தன்னுடன் இணைந்து பணியாற்றுவது என ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு திருச்சபையில் கர்தினால் பெர்த்தோனே ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியுள்ளார் பாப்பிறை.குருத்துவத் திருநிலைப்பாட்டின் 50 ஆண்டு நிறைவையொட்டி திருப்பீடச் செயலருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேளை, அவருக்கான இறைவனின் கொடைகளுக்காக சகாய அன்னை மற்றும் புனித ஜான் போஸ்கோவின் பரிந்துரைகளை வேண்டுவதாகவும் தன் வாழ்த்துச்செய்தியில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.