2010-06-30 14:56:40

சட்டங்களுக்குப் புறம்பான, ஆனால் அதிக வருமானம் அளிக்கக் கூடிய உலக வர்த்தகம் மனித வர்த்தகமே - ஐ.நா. அறிக்கை


ஜூன்30,2010 சட்டங்களுக்குப் புறம்பான, ஆனால் அதிக வருமானம் அளிக்கக் கூடிய உலக வர்த்தகம் மனித வர்த்தகமே என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
மனித வர்த்தகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஐ.நா.வின் ‘நீல இதய அறக்கட்டளை’ (Blue Heart Foundation) என்ற அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஸ்பெயின் இச்செவ்வாயன்று இணைந்தபோது இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
ஐரோப்பாவில் அடிமைத்தனம் பல நூற்றாண்டுகளுக்கு முன் அழிக்கப் பட்டுவிட்டதாகக் கூறினாலும், அடிமைகளாக மனிதர்களை நடத்தும் பல வழிமுறைகள் இன்னும் நம் மத்தியில் உள்ளதென இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா. அதிகாரி Antonio Maria Costa கூறினார்.
போதைப் பொருள், மற்றும் பிற குற்றங்களை ஆராயும் ஐ.நா.வின் அலுவலகத்திலிருந்து இச்செவ்வாயன்று வெளியான இந்த அறிக்கையில், உலகில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 140,000 மனிதர்கள் விற்கப்படுகின்றனர் என்றும் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறு வயது பெண்களே என்றும் கூறப்பட்டுள்ளது.உலகில் இப்போது 2,400,000 க்கும் மேலானோர் மனித வர்த்தகத்தால் அடிமை படுத்தப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களும், குழந்தைகளுமே என்றும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.