2010-06-29 15:46:36

நற்செய்தி அறிவித்தல் என்பது கிறிஸ்தவ சமூகத்திற்கும் மனித குலமனைத்திற்கும் செய்யும் சேவை என்கிறார் திருத்தந்தை


ஜூன் 29,2010. இன்றைய உலகில் அச்சத்தாலும் மனச்சுமைகளாலும் ஒடுங்கிப்போயிருக்கும் மக்களுக்கு இறைவனின் நற்செய்தியை எடுத்துச்செல்வது என்பது கிறிஸ்தவ சமூகத்திற்கும் மனித குலமனைத்திற்கும் செய்யும் பெரும் சேவையாகும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இயேசுவை அறியாதவர்களுக்கு மட்டுமல்ல ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கும் மீண்டும் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டிய தேவை உள்ளது என்ற திருத்தந்தை, திருச்சபையானது இன்னும் இளமையானதாகவும் வருங்காலத்திற்கு தன்னைத் திறந்ததாகவும் உள்ளது என்றார்.

இவ்வுலகின் புதுப்பித்தலுக்கான மிகப்பெரும் வலிமை திருச்சபை என நாம் குறிப்பிடும்போது, நற்செய்தியின் சக்தியையே குறிப்பிடுகிறோம் எனவும் புனித பேதுரு மற்றும் பவுல் திருவிழாவையொட்டி அதற்கு முந்தைய நாள் ரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காவில் நடத்திய மாலை வழிபாட்டின்போது கூறினார் பாப்பிறை.

இன்றைய உலகின் சவால்கள் பல மனித சக்திக்கு அப்பாற்பட்டவைகளாக உள்ளன என்ற திருத்தந்தை, இன்றைய உலகின் தேவைகளை இறைவனே நிறைவு செய்யமுடியும் எனவும் எடுத்துரைத்தார்.

பழைய அடித்தளத்தில் வளர்ந்து நிற்கும் திருச்சபை, இறைவனை விட்டு விலகிச் சென்று வளர்ச்சியை நாடும் சமூகத்திடையே செல்ல வேண்டியிருப்பதால், புதிய நற்செய்தி அறிவித்தல் என்பது இன்றியமையாததாகின்றது என மேலும் வலியுறுத்தினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.