2010-06-29 15:45:27

தீமைகளிலிருந்து மனிதனை விடுவிக்க வல்லவர் இறைவனே என்கிறார் திருத்தந்தை


ஜூன் 29,2010. தனக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அருகில் இருக்கும் இறைவன் ஒவ்வொரு தீமையிலிருந்தும் அவர்களைக் காப்பதோடு, தீயச்சக்திகளிலிருந்து திருச்சபையையும் விடுவிக்கிறார் என்பதை மையமாக வைத்து இச்செவ்வாயன்று புனித பேதுரு மற்றும் பவுல் திருவிழாத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இந்தியாவின் வேராப்பொளி பெருமறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கல்லறைக்கல் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 38 பேராயர்களுக்கு அவர்களின் அதிகாரத்தைக் குறிக்கும் பாலியம் என்ற கழுத்துப்பட்டயத்தை வழங்கி இத்திருவிழாத் திருப்பலியில் மறையுரையாற்றிய பாப்பிறை, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் அனுபவித்த துன்பங்களையும், அதிலிருந்து இறைவன் அவர்களைக் காப்பற்றிய விதங்களையும் எடுத்தியம்பினார்.

துவக்க காலத்திலிருந்தே திருச்சபை பல்வேறு துன்பங்களை அனுபவித்தே வந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, ஆனால் எச்சூழலிலும் அது நம்பிக்கையை இழக்காமல் இறைவனின் துன்ணையுடன் விசுவாசத்தில் நடைபோட்டு வருகின்றது என்றார்.

திருத்தந்தையின் கைகளால் பேராயர்கள் பாலியம் பெறும் இந்நிகழ்வானது, திருச்சபையில் பாப்பிறைக்கும் பேராயர்களுக்கும் இடையேயான ஐக்கியத்தின் அடையாளமாக உள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்தவ சபைகளுக்கிடையே காணப்படும் பிரிவினைகள், தீய சக்திகளின் அடையாளங்களாக உள்ளன எனவும் கூறிய திருத்தந்தை, இப்பிளவுகள் களையப்பட்டு ஐக்கியம் நோக்கி நடை போடவேண்டியதன் அவசரத்தேவையையும் வலியுறுத்தினார்







All the contents on this site are copyrighted ©.