2010-06-28 15:35:50

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் - இறைவனின் அழைப்புக்குப் பதில் சொல்வது ஓர் அழகான அனுபவம்


ஜூன் 28, 2010. இயேசுவைப் பின்செல்லுவதற்காக எல்லாவற்றையும், ஏன், தங்களையுமே இழந்துவிட்டவர்கள் விடுதலையின் புதிய கூறில் நுழைகிறார்கள், இதையே புனித பவுல் தூயஆவியில் வாழும் வாழ்க்கை என்று அழைக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

விடுதலையின் இந்தப் புதிய வடிவம் ஒருவர் மற்றவருக்குத் தொண்டு புரிவதை நமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது, எனவே விடுதலையும் அன்பும் ஒன்றே, மாறாக ஒருவர் தனது சுயநலத்திற்குப் பணிந்து நடந்தால் போட்டியுணர்வுகளையே ஏற்படுத்தும் என்றுரைத்தார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, தனது அப்போஸ்தலிக்க மாளிகையின் ஜன்னல் வழியே மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களை அடிப்படையாக வைத்து, கிறிஸ்து நமக்கு விடுக்கும் அழைப்பும், அவ்வழைப்பு முன்வைக்கும் "வற்புறுத்தல்களும்" குறித்து விளக்கிய திருத்தந்தை, இறைவனின் அழைப்பைத் தீவிரமாய் ஏற்பதில் இருக்கும் அழகு பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

கடவுளுக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்காகத் தான் பிறந்த குடும்பம், படிப்பு, வேலை ஆகிய அனைத்தையும் துறந்துவிடும் இளைஞனின் அதிர்ஷ்டத்தை விளக்கிய அவர், இறையழைப்புக்குத் தீவிரமாய்ப் பதில் சொல்வோர், வாழும் அடையாளமாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.

திருச்சபையில் நடைபெறும் மிக அழகான அனுபவங்களில் ஒன்றாக இது இருக்கின்றது, மக்களின் வாழ்வில் ஆண்டவரின் கரம் செயல்படுவதை இது உணரச் செய்கின்றது, கடவுள் எட்டமுடியாத தூரத்தில் இல்லை, அவர் நம் மத்தியில் வாழ்கிறார், நம்மை அன்பு செய்கிறார், அன்பு செய்ய நம்மை அழைக்கிறார், அவர் மனிதனின் இதயத்தை மிக அதிகமாக நிறைக்கின்றார் போன்ற உணர்வுகளை இது தருகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை.

ஜூன் மாதத்தில் திருச்சபை இயேசுவின் திருஇதய பக்தியைக் கொண்டாடுகிறது, இந்த ஜூன் மாதம் நிறைவடையும் இத்தருணத்தில், இயேசுவின் இதயத்தின் மனித மற்றும் இறைப்பேருண்மையைத் தியானிக்குமாறும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.