2010-06-28 15:38:07

கான்ஸ்டான்டி நோபிள் ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதாவின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தார் பாப்பிறை.


ஜூன் 28, 2010 இறையியல் பேச்சுவார்த்தைகளுக்கான கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சர்வதேச ஒன்றிணைந்த அவையின் நடவடிக்கைகள் நல்ல முன்னேற்றத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோம் நகரில் மிகச்சிறப்பான விதத்தில் கொண்டாடப்படும் புனித பேதுரு மற்றும் பவுல் திருவிழாவையொட்டி வத்திக்கான் வந்திருந்த கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதாவின் பிரதிநிதிகளுக்கு இத்திங்கள் காலை உரை வழங்கிய பாப்பிறை, கிறிஸ்தவத்தின் முதல் ஆயிரம் ஆண்டுகளில் திருச்சபை ஐக்கியத்தில் உரோமை ஆயரின் பங்கு என்பது குறித்து கடந்த அக்டோபர் முதல் விவாதித்து வரும் இக்குழுவின் பேச்ச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்றார்.

வரும் அக்டோபரில் வத்திக்கானில் இடம்பெற உள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆயர் பேரவையில் அப்பகுதியின் கிறிஸ்தவ மதங்களிடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் எனவும் அக்குழுவிடம் கூறினார் பாப்பிறை.

மத்திய கிழக்குப் பகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய மற்றும் யூத மத்துடன் பேச்ச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியதன் தேவை குறித்தும் கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதாவின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.