2010-06-26 16:12:26

பெல்ஜிய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகத்தில் காவல்துறை சோதனைகள் நடத்தியுள்ள விதம் குறித்து திருப்பீடம் அதிர்ச்சி


ஜூன்26,2010 குருக்களின் தவறானப் பாலியல் நடவடிக்கை குற்றச்சாட்டுத் தொடர்பாக, பெல்ஜிய நாட்டு கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகத்தில் காவல்துறை சோதனைகள் நடத்தியுள்ள விதம் குறித்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது திருப்பீடம்.

Brussels லுள்ள பெல்ஜிய கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் இல்லத்தில் இவ்வியாழன் காலை 10.30 மணிக்குச் சோதனையைத் தொடங்கிய காவல்துறை, மாலை 7.30 மணி வரை நடத்தியது. அச்சமயத்தில் அலுவலகங்கள் மற்றும் மெக்லென் பேராலயத்தில் சோதனைகளை நடத்திய காவல்துறை, அவ்வில்லத்தில் மாதாந்திரக் கூட்டத்தை நடத்தி வந்த ஆயர்களை ஒன்பது மணி நேரங்களுக்கு வெளியே போகவிடாமல் வைத்திருந்தது.

பதுக்கி வைக்கப்பட்ட ஆவணங்களைத் தேடும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, Brussels பேராலயத்திலுள்ள இரண்டு கர்தினால்களின் கல்லறைகளில் துளைபோட்டு காமராவைச் செலுத்தித் தேடுதல் வேட்டை நடத்தியது. அத்துடன், குருக்களின் தவறானப் பாலியல் நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் திருச்சபை குழுவின் தலைவர் Peter Adriaensses ன் அலுவலகத்திலிருந்து சுமார் ஐந்நூறு இரகசிய ஆவணங்களையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

பெல்ஜிய காவல்துறையின் இந்நடவடிக்கை இறந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையை அவமதிப்பதாக இருக்கின்றது என்று திருப்பீடச் செயலகம் கவலை தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.