2010-06-25 16:27:30

மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதி ஏற்பட திருத்தந்தை அழைப்பு


ஜூன்25,2010. புனித பூமி, ஈராக், மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் எவ்விதச் சமய, கலாச்சார, சமூகப் பாகுபாடின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதிப்பதன் வழியாகப் பிறக்கும் உறுதியான அமைதி ஏற்பட வேண்டுமென்று தான் விரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கீழைநாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களைத் தான் இறைவனிடம் அர்ப்பணிப்பதாக உரைத்த திருத்தந்தை, சுதந்திரம் மற்றும் அமைதியில் பிறக்கும் நீதியை நிலைநாட்டுவதற்குக் கீழைரீதி திருச்சபைத் தலைவர்கள் கருவியாகச் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

ROACO எனப்படும் கீழைரீதி திருச்சபைகளுக்கு உதவும் பிறரன்பு நிறுவனங்களின் 75 உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மத்திய கிழக்குப் பகுதியில் நற்செய்தியின்பொருட்டு துன்பங்களை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களைத் தான் சிறப்பாக நினைவுகூர்வதாகத் தெரிவித்தார்.

இக்கிறிஸ்தவர்கள் தாங்கள் பிறந்த இடங்களிலே தொடர்ந்து வாழுமாறு கேட்டுக் கொண்ட அதேவேளை, பிறநாடுகளில் குடியேறியிருக்கும் அப்பகுதி கிறிஸ்தவர்கள் தங்களது மனித மற்றும் கிறிஸ்தவப் பாரம்பரியத்திற்குப் பிரமாணிக்கமாக இருக்குமாறும் வலியுறுத்தினார்.

அண்மையில் நிறைவடைந்த அருட்பணியாளர்கள் ஆண்டு நிகழ்வுகளில் கீழைரீதி கத்தோலிக்கத் திருச்சபைகள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டது குறித்தத் தனது பாராட்டையும் தெரிவித்தார் திருத்தந்தை.

அதேவேளை, குருத்துவப் பயிற்சியில் கவனம் செலுத்தவும், வயோதிக் குருக்கள் மீது அக்கறை காட்டவும் வேண்டுமென ROACO உறுப்பினர்களிடம் பரிந்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.