2010-06-25 16:29:34

கடல் தொழிலாளர்களின் கடின உழைப்பை நினைவுகூரத் திருப்பீடம் அழைப்பு


ஜூன்25,2010 பொதுவாக, கடல் தொழிலாளர்கள் “வெளிப்படையாகக் காண முடியாதவர்கள்” என்று விவரிக்கப்படும்வேளை, அவர்களின் கடின உழைப்பையும் தியாகத்தையும் கிறிஸ்தவச் சமூகங்கள் அங்கீகரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது திருப்பீடம்.

வருகிற ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படும் “கடல் ஞாயிறை” முன்னிட்டு செய்தி வெளியிட்ட, குடியேற்றதாரர் மற்றும் இடம்பெயர்வோர்க்கு மேய்ப்புப்பணியாற்றும் திருப்பீட அவை, தங்களின் கடின உழைப்பு மற்றும் தியாகங்கள் மூலம் நம் வாழ்க்கையை வசதி நிறைந்ததாக அமைக்கும் அவர்கள் “உண்மையான மக்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

கடல்சார்ந்த கத்தோலிக்கத் தொழிலாளர்களுக்கு ஆன்மீகப்பணி செய்வதற்கென ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் இந்தத் தொண்ணூறாவது ஆண்டில், கடல்சார் தொழிலாளர் குறித்த 2006ம் ஆண்டின் உலக ஒப்பந்தத்தை நாடுகள் அமல்படுத்துவதில் வேகம் காட்ட வேண்டுமென அழைப்பு விடுக்க விரும்புவதாகவும் அச்செய்தி கூறுகிறது.

இந்தத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்பவர்கள் அல்ல, மாறாக ஒரு துறைமுகத்திலிருந்து அடுத்த துறைமுகம் எனச் சென்று கொண்டிருப்பவர்கள், இவர்கள் தொடர்ந்து தனிமையையும் அநீதிகளையும் எதிர்கொள்கின்றனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.

இவ்வுலகின் சுமார் 15 இலட்சம் கடல்சார் தொழிலாளருக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்தில், IMO என்ற சர்வதேச கடல்சார்ந்த நிறுவனம், 2010ம் ஆண்டை, கடல்சார்ந்த தொழிலாளர் ஆண்டாகக் கடைபிடித்து வருகிறது.

புறக்கணிக்கப்பட்ட இந்தக் கடல்சார்ந்த கத்தோலிக்கத் தொழிலாளர்களுக்கு ஆன்மீகப்பணி செய்வதற்கென, 1920ம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி கிளாஸ்கோவில் சிலர் இணைந்து ஓர் அமைப்பை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியில் குடியேற்றதாரர் மற்றும் இடம்பெயர்வோர்க்கு மேய்ப்புப்பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் அந்தோணியோ மரியவேலியோவும் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோவும் கையெழுத்திட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.