2010-06-23 16:09:05

பொது இடங்களிலிருந்து சிலுவைகளை அகற்றுவது, ஐரோப்பாவில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஊறு விளைவிக்கும் - கிரேக்க நாட்டு ஆயர்கள் அறிக்கை


ஜூன்23,2010 பொது இடங்களிலிருந்து சிலுவைகளை அகற்றுவது, ஐரோப்பாவில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஊறு விளைவிக்கும் என்று கிரேக்க நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள சிலுவைகள் அகற்றப்பட வேண்டுமென ஆரம்பமான இந்த வழக்கு, இந்த ஜூன் மாதம் 30 அன்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றத்தில் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் சூழ்நிலையில், கிரேக்க நாட்டு ஆயர்கள் தங்கள் கருத்தை ஒரு அறிக்கையின் மூலம் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, இத்தாலி நாடு மேல் முறையீடு செய்ததும், அதற்கு ஆதரவாக ஐரோப்பாவின் மேலும் பத்து நாடுகள் ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத் தக்கது.ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கலாச்சாரம் பன்முகமாகி வரும் இந்தக் காலக் கட்டத்தில் எல்லா மதங்கள், மொழிகள் இவற்றின் அடிப்படை அடையாளங்களை மதிப்பதே நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கும் வழி என்றும் பல நூறு ஆண்டுகள் கிறிஸ்துவ பாரம்பரியத்தில் ஊறி இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் சிலுவையை வெளிப்படையாக வைத்திருப்பதை தடை செய்வது கலாச்சார வேர்களை அறுப்பதற்கு இணையாகும் என்றும் கிரேக்க ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.